அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்றே

அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்றே
Updated on
2 min read

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘நாட்டு மக்களிடம் உள்ள சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி’ என்று பிரதமர் பேசியுள்ளார்.

அவரது பேச்சு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதுடன், மக்களின் சமூக பொருளாதார நிலையையும் கணக்கெடுத்து, மக்களுக்குச் சம அளவில் பொருளாதார நிலை இருக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும்’ என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங், ‘நாட்டில் அரசின் சலுகைகளைப் பெற சிறுபான்மை மக்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று தெரிவித்த கருத்தையும், ‘இந்த ஆட்சியில் யார் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று கணக்கிட்டு, அவை பகிர்ந்தளிக்கப்படும்’ என்று ராகுல் பேசியதையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் தொடர்புபடுத்தி, பிரதமர் ஒரு அஸ்திரத்தை வீசியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற பொருள்படும் கருத்து தேர்தல் நேரத்தில் வாக்கு அரசியலுக்கான முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

2024 தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பாஜக செய்த பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி எப்படித் திரித்து, ‘பாஜக சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதச்சார்பின்மை இருக்காது, ஜனநாயகம் இருக்காது’ என்று பிரச்சாரம் செய்கிறதோ, கறுப்புப் பணம் அனைத்தையும் மீட்டால் மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போட முடியும் என்று பிரதமர் சொன்னதை, ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னதாகத் திரித்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனரோ, அதேபோல காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீதும் சில உள்அர்த்தங்களைச் சேர்த்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் பணம், நகை, சொத்து பறிபோகும் என்பதைப் போன்ற பிரச்சாரம் பாஜக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ அணியினர், மதச்சார்பின்மை பேசி சிறுபான்மை வாக்குகளைப் பெறுகின்றனர். சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கையிலெடுத்து, இந்துக்களின் வாக்குகளைப் பிளவுபடுத்துவதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று கருதுகின்றனர். இந்தக் கொள்கை, பல மாநிலங்களில் அந்தக் கூட்டணிக்குப் பலன் தந்துள்ளது.

முழுமையான சிறுபான்மை ஆதரவு, இந்துக்களின் வாக்குகளில் பிளவு என்ற நிலை பாஜக-வின் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து. மதச்சார்பின்மையைப் பின்பற்ற பாஜக-வை விடச் சிறந்த கட்சிகள் அதிகம் உள்ள நிலையில், இந்துக்களின் கட்சி என ஆணித்தரமாகக் காட்டினால் மட்டுமே பாஜக-வால் அரசியல் செய்ய முடியும். அதன் வெளிப்பாடே பிரதமரின் இத்தகைய பேச்சுக்கு அடிப்படை.

அரசியல் சதுரங்க விளையாட்டின் ஒரு அம்சமாக இது பார்க்கப்பட்டாலும், மக்களை அச்சுறுத்தும் வகையில், பிளவுபடுத்தும் வகையில் எல்லை தாண்டும்போது தேர்தல் ஆணையம் தலையிட்டு ஜனநாயகம் காப்பதில் தவறில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in