தேர்தல் கட்டுப்பாடுகள்: முழுமையாக நீக்கப்பட வேண்டும்!

தேர்தல் கட்டுப்பாடுகள்: முழுமையாக நீக்கப்பட வேண்டும்!
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 அன்று தமிழ்நாட்டில் முடிவடைந்துவிட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் சோதனையை உள் மாவட்டங்களில் திரும்பப் பெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், எல்லையோர மாவட்டங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கமாகக் கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடு நீடிப்பது மக்களுக்குத் தேவையற்ற சிரமத்தைக் கொடுப்பதாகும்.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த மார்ச் 16இலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தவும் எல்லோருக்கும் சமமான களத்தை உருவாக்கவுமே நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

தேர்தல் பணிகள் முழுமையாக முடியும்வரை இந்த விதிகள் அமலில் இருப்பது நடைமுறை. இதில் தேர்தலில் பண விநியோகத்தைத் தடுப்பதும் அடங்கும். அந்த வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லப்படும் பணம், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படுகிறது.

பொதுவான தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கு மானவை. ஆனால், ரொக்கம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் எனப் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கக்கூடியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரிக்கும் முதல் கட்டத்திலேயே தேர்தல் முடிந்துவிட்டதால் அந்தக் கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இச்சூழலில் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட இருப்பதாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்திருக்கிறார். அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தில் தேர்தல் முடியும்வரை எல்லையோர மாவட்டங்களில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், ரூ.50,000 என்கிற உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினரைப் பாதிப்பதாக, அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையும். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்ற அரசியல் தலைவர்கள் இதை விமர்சித்துள்ளனர்.

திருமணத்துக்காகத் தங்கம் வாங்குவோர், மருத்துவமனைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர் சேர்க்கைக்காகச் செல்வோர், சிறு வியாபாரிகள் போன்றோர்கையில் பணத்தை வைத்திருப்பது பல நேரம் தவிர்க்க முடியாதது என்பதைத்தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உரிய ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது.

ஒரு மாநிலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்போது, தேர்தல் முடியும்வரை கட்டுப்பாடுகள் தொடர்வது நியாயமானது. ஆனால், அண்டை மாநிலங்களில் தேர்தல் முடியும்வரை, தேர்தல் முடிந்துவிட்ட மாநிலத்தில் கட்டுப்பாடுகள் நீடிப்பது தேவையற்றது.

இதற்கு மாறாக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது, அனைத்து வாகனங்களையும் தணிக்கைக்கு உள்ளாக்குவது போன்ற பணிகள் மூலம் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முயலலாம்.

ரொக்கப் பணம் தொடர்பான கட்டுப்பாட்டைத் தமிழ்நாடு, புதுச்சேரியில் முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து தேர்தல் ஆணையம் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in