மக்கள் நல வாக்குறுதிகள் நிறைவேறட்டும் 

மக்கள் நல வாக்குறுதிகள் நிறைவேறட்டும் 
Updated on
2 min read

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும், அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தமது வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டிருப்பது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், கல்வி-வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% உச்ச வரம்பை நீக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினரும் பயனடையக்கூடியதாக மாற்றப்படும் என்பது போன்ற சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள் மாநில அரசுகளின் விருப்பத்துக்கு விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று கூறும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை குறித்து எதுவும் சொல்லவில்லை.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது, முத்தலாக்கைத் தண்டனைக்குரிய குற்றம் ஆக்கியது, நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பயனடையும் இலவச தானியங்கள் வழங்கும் திட்டம், வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு, 25 கோடி இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டது ஆகியவை மோடி தலைமையிலான அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நாடாளுமன்ற-சட்டமன்றங்களில் 33% மகளிர் இடஒதுக்கீடு ஆகியவை அமல்படுத்தப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கை பட்டியலிடுகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து இந்த அறிக்கை மெளனம் காக்கிறது.

வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் விதமாக மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிப்பதன் மூலம் உயர் ரக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது பாஜகவின் வாக்குறுதி.

இரண்டு கட்சிகளும் மகளிருக்கான திட்டங்களையும் கணிசமான மக்கள் நலத் திட்டங்களையும் அறிவித்துள்ளன. மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று காங்கிரஸும், தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் மூலம் மூன்று கோடி கிராமப்புறப் பெண்கள் லட்சாதிபதி ஆக்கப்படுவார்கள் என்று பாஜகவும் கூறியுள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இலவச தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்; அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று கோடிப் பேருக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

யார் ஆட்சி அமைத்தாலும் தமது அரசியல்ரீதியான செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான வாக்குறுதிகளைவிட வேலைவாய்ப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வாக்குறுதிகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் காலச் சம்பிரதாயம் ஆகிவிடக் கூடாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in