

ம
க்களவைக்கும் அனைத்து மாநில, ஒன்றியப் பகுதிகளின் சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கோரிவருகிறார். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கும் கட்சியையே சட்டமன்றத்துக்கும் வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த யோசனையை அவர் முன்வைக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது நிறைவேற்ற முடியாதது மட்டுமல்ல; விரும்பத்தகாததும்கூட.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் கருத்தைக் கேட்டிருக்கும் மத்திய சட்ட ஆணையம் வரைவு அறிக்கையின் மூன்று பக்க சாரத்தையும் வெளியிட்டிருக்கிறது. கருத்துகள் கிடைத்த பிறகு பரிந்துரை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளிக்க உத்தேசித்திருக்கிறது. இந்த வரைவு அறிக்கை முன்வைக்கும் பல சீர்திருத்தங்களை மக்களவைக்கும் சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாமலேயேகூட அமல்படுத்தலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் அரசுகளால் நிர்வாகத்தில் அதிக நாட்களுக்குக் கவனம் செலுத்த முடியும். தேர்தல் நடத்தும் செலவு கணிசமாகக் குறையும். ஆனால், இதைச் சாத்தியப்படுத்துவது எளிதல்ல. மக்களவையின் பதவிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் என்றால் பல மாநில சட்ட மன்றங்கள் திரும்பவும் ஒரு தேர்தலை மிகக் குறுகிய காலத்தில் சந்திக்க நேரும். சட்டபூர்வமாக அவர்கள் பெற்ற ஐந்தாண்டுக்காலப் பதவியைச் சீர்திருத்தத்துக்காகப் பறிப்பது போலாகிவிடும். அது மட்டுமல்லாமல் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் ஜனநாயகக் கூறுகளுக்கும் கேடு விளை விப்பதாகிவிடும்.
தேர்தல் ஆணையம் மாற்று யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டிய பதவிக்காலம் உள்ள சட்ட மன்றங்களுக்குச் சேர்த்து முதல் கட்டமாகத் தேர்தல் நடத்துவது; அடுத்த இரண்டரை ஆண்டுகள் கழித்து எஞ்சிய மாநிலங்களுக்கு மொத்தமாகத் தேர்தல் நடத்துவது என்பது அந்த யோசனை. அப்படியானால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சட்ட மன்றத் தேர்தல்களை நாடு சந்தித்தாக வேண்டும்.
கூட்டணி அரசுகள்தான் பெரும்பாலும் பதவிக்காலத்துக்கு முன்னரே ஆட்சியை இழக்கின்றன. இப்படித் தாங்களாகவே ஆட்சியை இழந்தாலும் இழக்க வைக்கப்பட்டாலும் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்துவதுதான் சரி என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் வலியுறுத்துகிறார்கள். எனவே, சாத்தியங்கள் குறைவான, பாதிப்புகள் அதிகம் கொண்ட இத்தகைய சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் இதர சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும்!