கருப்புக்கு வெள்ளையடிப்பது எப்போது?

கருப்புக்கு வெள்ளையடிப்பது எப்போது?
Updated on
1 min read

கருப்புப் பணத்தால்தான் இந்தியப் பொருளாதாரம் பாழாகிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், அந்தக் கருப்புப் பணம் எப்படி, யாரால் உருவாகிறது, அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது என்பதுகுறித்து யாரும் தெளிவாக விளக்க மறுக்கின்றனர்.

கருப்புப் பணம் எவ்வளவு என்ற மதிப்பீட்டிலேயே அரசுக்கும் அரசு சாராத அமைப்புகளுக்கும் இடையில் கருத்தொற்றுமை இல்லை. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி-சுமார் ரூ.1,12,60,800 கோடி) 75% என்று ‘பொது நிதி, கொள்கைக்கான தேசியக் கழகம்' (என்.ஐ.பி.எஃப்.பி.) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. அதாவது, இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்புத் தொகையின் 75% மதிப்புக்கு இணையாகக் கருப்புப் பணமும் உலவுகிறது.

கருப்புப் பணம் உருவாகும் இடங்கள் என்று நான்கு துறைகளை என்.ஐ.பி.எஃப்.பி. அடையாளம் கண்டுள்ளது. அவை: 1. நிலம், மனை, வீடு உள்ளிட்ட சொத்துகளின் பரிமாற்றத்தை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் துறை. 2. சுரங்கத் தொழில்துறை. 3. பள்ளிக்கூடங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்றவற்றை நடத்தும் தனியார். 4. அரசின் மானியங்களைத் திசைதிருப்புவதன் மூலம் பணப் பயன் பெறுவோர்.

கட்சி பேதமின்றி எல்லாக் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பெரிதும் நம்பியிருப்பது கருப்புப் பணத்தைத்தான். கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சிக்குக் கோரிக்கை விடுப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதாக ஆளுங்கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும் வெற்றுச் சம்பிரதாயம் என்பதே இதுவரை நடைமுறை.

வருமானத்தை மறைக்க முடியாத மாதச் சம்பளக்காரர்கள், சொத்துகளைத் தங்கள் பெயரில் வாங்கும் நடுத்தர வர்க்க மக்கள் தவிர, மற்றவர்களிடம் அரசு கடுமையாக நடந்துகொள்வதில்லை. வருமான வரித் துறையின் மதிப்பீட்டுக்கும் வரி செலுத்துவோர் தரும் கணக்குக்கும் உள்ள வித்தியாசத்தால் தீர்மானிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கும் தொகையின் மதிப்பே நாலரைலட்சம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது. அதேபோல், பத்திரப் பதிவுத்துறையில் வழிகாட்டு மதிப்பு, சந்தை மதிப்பு என்று ஒரே சொத்துக்கு இருவித மதிப்புகள் நிலவுகின்றன. இதைப் பயன்படுத்தி, பத்திரங்களைப் பதிவு செய்யும்போது, சொத்தின் உண்மையான மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டு கருப்புப் பணம் உருவாக வழி செய்யப்படுகிறது. சுரங்கத் துறையில் புரளும் கருப்புப் பணத்துக்குக் கணக்கே கிடையாது. தொழில் துறையிலும் சேவைத்துறையிலும் கருப்புப் பணம் உருவாகும் விதத்தையும் அதன் அளவையும் அரசின் வெவ்வேறு துறைகள் முனைந்தால் கண்டுபிடித்துவிட முடியும்.

புதிய அரசு, ‘வளர்ச்சி’ என்ற சொல்லை மந்திரம்போல் உச்சரித்துவருகிறது. ஆனால், அந்த வளர்ச்சியின் பேரில்தான் இவ்வளவு கருப்புப் பணமும் உருவானது என்பதை அரசு வசதியாக மறந்துவிட்டது. இவ்வளவு கருப்புப் பணத்தில் பாதி அளவை வெளிக் கொண்டுவந்தாலே இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் வறுமையையும் பெருமளவில் ஒழித்துவிட முடியும். இதையெல்லாம் மறந்துவிட்டு ‘வளர்ச்சி, வளர்ச்சி' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், அது யாருக்கான வளர்ச்சி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in