சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன்கள் வழிவகுக்கக் கூடாது!

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன்கள் வழிவகுக்கக் கூடாது!
Updated on
2 min read

வழக்குகளில் சிக்குபவர்கள் தாங்கள் கைதுசெய்யப்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முன்கூட்டியே பிணை பெறுவது (முன்ஜாமீன்) குறித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, நீதித் துறை குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. ‘பெரும்பாலான வழக்குகளில் பிணை வழங்குவது இயல்பானதுதான்; அதேநேரம், முன்ஜாமீன் வழங்குவது அப்படியானது அல்ல’ என்று சுட்டிக்காட்டியிருக்கும் நீதிமன்றம், ‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவது நீதி வழுவுதலுக்குச் சமம்’ என்றும் கண்டிப்பான தொனியில் கூறியிருக்கிறது.

2020 பிப்ரவரியில், பிஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் ஜுஹுலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சூனியக்காரர் எனப் பழிசுமத்தி, கடுமையாகத் தாக்கியதாகவும் ஆடையைக் கிழித்து, மனிதக் கழிவுகளை உட்கொள்ளச் செய்து அவமானப்படுத்தியதாகவும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சக மனிதர்களைச் சூனியக்காரர்கள் என முத்திரை குத்திக் கொடுமைப்படுத்துதலுக்கு எதிரான சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதையடுத்து, தாங்கள் கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்புவதற்காக, முன்ஜாமீன் கேட்டு பாட்னா உயர் நீதிமன்றத்தை அவர்கள் அணுகினர்; நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்ஜாமீன் என்பது அசாதாரணமானது, கேட்கும் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.

“பல வழக்குகளில் பிணை வழங்கப்படுவது ஒரு விதி என்று கூறப்பட்டாலும், முன்ஜாமீன் வழங்கப்படுவது விதியாக இருக்க முடியாது” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், “கடுமையான குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்குவது நீதி வழுவவும், சில வேளைகளில் சாட்சியங்களைச் சிதைக்க அல்லது திசைதிருப்பவும் வழிவகுக்கும்; விசாரணை பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இதுபோன்ற வழக்குகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று நீதிமன்றங்களுக்கும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நீதித் துறையில் முன்ஜாமீன் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாகத் தொடர்பவை. 2023 நவம்பரில், முன்ஜாமீன் கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, “நீதி மீதான அக்கறையின் பெயரில் வேறு மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளிலும் உயர் நீதிமன்றங்கள் / அமர்வு நீதிமன்றங்கள் முன்ஜாமீன் வழங்க முடியும். அதேவேளையில், விதிவிலக்கான மற்றும் கட்டாயச் சூழ்நிலைகளில் மட்டுமே அதைச் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

கொடும் குற்றமிழைத்தவர்கள்கூட வழக்கு விசாரணைகளிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் தப்புவதற்கு முன்ஜாமீனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கிறோம். பிஹார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர், பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டுகள் அனுப்பப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவந்ததாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருப்பது ஓர் உதாரணம்.

அந்த வகையில், குற்றமிழைத்தவர்கள் சட்டத்தில் இருக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்தியே தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு, குற்றமிழைப்பவர்கள் சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாவார்கள் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் வகையில் நீதிமன்றங்களால் பின்பற்றப்பட வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in