மக்கள்தொகை சர்ச்சை: மனம் மாறட்டும் மத்திய அரசு!

மக்கள்தொகை சர்ச்சை: மனம் மாறட்டும் மத்திய அரசு!
Updated on
2 min read

கேரள மாநில அரசுக்குக் கடன் வழங்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அம்மாநில அரசுக்கு ரூ.13,608 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசின் நீண்ட நாள் சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்த வழக்கின் மூலம், மாநில அரசின் கடன் வாங்கும் அதிகாரம் குறித்த முக்கியமான வாதத்தையும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு எழுப்பியிருக்கிறது.

கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாகவே பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. கடன் வரம்பை அதிகரிக்கக் கோரிய கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. “ஒரு மாநில அரசு தனது தவறான நிதி மேலாண்மையால் நிதி நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க முடியாது.

அப்படிச் செய்வது மாநில அரசுகள் நிதிக் கொள்கைகளை மதிக்காமல் செயல்பட்டுவிட்டு கூடுதல் கடன் பெறும் உரிமை கோருவதை ஊக்குவிக்கும் தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று நீதிபதி கூறியுள்ளார். ஆனால், 15ஆவது நிதி ஆணையத்தின் புதிய கொள்கையால் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பிற தென் மாநிலங்களைப் போல் குறைவான நிதிப் பகிர்வால் பாதிக்கப்பட்டது கேரளத்தின் நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இயற்கைச் சீற்றம், கரோனா பரவல் போன்ற எதிர்பாராச் சிக்கல்களும் இதில் பங்கு வகிக்கின்றன.

நடப்பிலிருக்கும் 15ஆவது நிதி ஆணையம் இதுவரை எல்லா நிதி ஆணையங்களும் பின்பற்றிவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1971-ஐக் கணக்கில் கொள்ளாமல் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுத்துக்கொண்டது.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்களைப் போல் வட மாநிலங்கள் கவனத்துடன் செயல்படவில்லை. அதனால் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வடமாநிலங்களுக்குக் கூடுதல் நிதி கிடைக்கும் சூழல் உள்ளது.

நிதி ஆணையத்தின் வரையறைகளில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான சிறப்பு நிதிப் பங்கீடும் (12.5%) உண்டு. ஆனால், அதுவும் 2011இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலானதுதான்.

நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் நிகழ்வதாக, தென் மாநிலங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் வரி ஒரு ரூபாய் எனக் கொண்டால் மத்திய அரசு திருப்பி அளிக்கும் நிதிப் பங்கீடு 29 பைசா மட்டுமே என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் தெரிவித்தார்; ஆனால், வசூலிக்கப்படும் தொகைக்கும் கூடுதலாக 1.72 ரூபாய் உத்தரப் பிரதேசத்துக்குத் திருப்பியளிக்கப்படுகிறது.

மேலும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான நிவாரண நிதியிலும் தென் மாநிலங்கள் பாரபட்சத்துக்கு ஆளாகின்றன. தற்போது உச்ச நீதிமன்றம், கடன் வாங்குவதற்கான மாநில அரசின் உரிமை குறித்த கேரள அரசின் கோரிக்கையை, அரசமைப்பு அமர்வுக்கு மாற்றியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 293இல் உள்ள கடன் வாங்கும் அதிகாரம் குறித்த உரிமை தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. மத்திய, மாநில அரசுகள் முரண்பட்டு நிற்பது அந்தக் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. அதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in