உயரும் புவி வெப்பநிலை: விழிக்க வேண்டிய தருணம்!

உயரும் புவி வெப்பநிலை: விழிக்க வேண்டிய தருணம்!
Updated on
2 min read

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, 2023 ஆம் ஆண்டு மிக அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டிருந்ததாக ஐ.நா அறிவித்திருக்கிறது. புவியின் காலநிலையை அளவிடும் உலக வானிலை நிறுவனத்தின் ஆண்டறிக்கைத் தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புவியை ‘விளிம்பின் மேல் நின்றுகொண்டிருக்கும் கோள்’ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டர்ஸ் குறிப்பிட்டிருப்பது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

2014 தொடங்கி 2023 வரையிலான பத்து ஆண்டுகள் அதிகபட்ச வெப்பநிலை நிலவிய ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. இயற்கை நமக்கு விடுத்திருக்கும் ‘வேதனையான அழைப்பு’ என ஐ.நா. மிகுந்த கவலையோடு இதைத் தெரிவித்திருக்கிறது. 2024ஆம் ஆண்டும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

புவியின் வெப்பநிலை, தொழிற்புரட்சி காலகட்டத்துக்கு முந்தைய (1850-1900) சராசரி வெப்பநிலையைவிடத் தற்போது 1.45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2015இல் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டின் முக்கிய அம்சமான பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் ஈடுபடவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

அதாவது, தொழிற்புரட்சி காலகட்டத்துக்கு முந்தைய வெப்பநிலையைவிட அதிகபட்சம் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையை உறுதிப்படுத்தும் வகையில் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதுதான் பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. ஆனால், அதற்கு நேர்மாறாகவே உலக நாடுகள் நடந்துகொள்கின்றன.

புதைபடிவ எரிபொருள்களின் கட்டுக்கடங்காத பயன்பாடு, தொழிற்சாலை மாசு, நகரமயமாக்கலுக்காகக் காடழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துவருகிறது. இதனால், புவிப்பரப்பில் வெப்ப அலைகள் அதிகரித்துப் பனிப்பாறைகள் உருகுவது, ஆர்க்டிக்-அன்டார்க்டிக் பகுதிகளில் பனி உருகுவது, கடல்மட்டம் உயர்வது போன்றவை ஏற்படுகின்றன.

விளைவாக, பெருங்கடல்கள் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்ப அலையை எதிர்கொண்டன எனச் சொல்லும் ஐ.நா., இதை அபாய எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என்கிறது. பொதுவாகவே தங்களை நேரடியாகப் பாதிக்காத எதைப் பற்றியும் பெரும்பாலான நாடுகளுக்கு அக்கறை இருப்பதில்லை.

புவி வெப்பமாவது குறித்து வானிலை அறிஞர்களும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் தொடர்ந்து எச்சரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளைப் பெரும்பாலான நாடுகள் முன்னெடுக்கவில்லை.

வளர்ச்சியோடு தொடர்புடைய நகரமயமாக்கல், தொழில் துறை வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவை காலநிலையோடு நேரடித் தொடர்பில் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் ஆக்கபூர்வமான திட்டங்களின் மூலம் மட்டுமே புவியின் தொடர் வெப்பநிலை உயர்வை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும்.

இனிவரும் ஆண்டுகளிலும் புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் கடுமையான வறட்சி, கடும் மழைப்பொழிவு, பெருவெள்ளம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும். தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

காலநிலை சீரமைப்பு தொடர்பான திட்டங்களுக்குப் பொருளாதாரமே அடிப்படை என்கிற நிலையில், வளர்ந்த நாடுகள் அதிக அளவில் இதற்குப் பங்களிக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போதுதான் மனித இனம் உட்பட உயிரினங்கள் அனைத்தும் வாழ உகந்ததாக இந்தப் புவி எஞ்சியிருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in