அரசமைப்புச் சட்டக் கடமைகளை ஆளுநர் மறக்கக் கூடாது

அரசமைப்புச் சட்டக் கடமைகளை ஆளுநர் மறக்கக் கூடாது
Updated on
1 min read

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான க.பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அமைந்தது துரதிர்ஷ்டவசமானது.

தமிழ்நாடு அமைச்சரவையில் உயர் கல்வித் துறைக்குப் பொறுப்பு வகித்த பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பொன்முடி திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பொன்முடி குற்றவாளி என்னும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதையடுத்து, பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாகத் தொடர்வதாகச் சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.

அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தித்தான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை” என்று கூறிப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கில் ஆளுநருக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பது ஏன்?’ என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பியது.

பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பது தொடர்பாக ஒருநாள் மட்டுமே உச்ச நீதிமன்றம் கெடு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்குப் பிறகு பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்திருந்தாலும், இதையொட்டி ஆளுநரின் செயல்பாடுகள் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாகும்.

மாநிலத்தில் ஒருவர் அமைச்சராகப் பதவியேற்பதற்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்; அமைச்சராவதற்கு முதலமைச்சரின் பரிந்துரை இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தகுதி. உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் அந்த நிலையைப் பொன்முடி எட்டிய பிறகும், முதலமைச்சரின் பரிந்துரைக்குப் பிறகும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று ஆளுநர் கூறியது தேவையற்ற சர்ச்சைக்கு வித்திட்டது.

உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுபோல ஒரு நபர் அமைச்சராவதில் ஆளுநருக்கு மாறுபட்ட கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், அரசமைப்புச் சட்டப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் நினைவூட்டியிருக்கிறது. இதை ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

ஊழல் கறை படிந்தவர்கள் அமைச்சராகலாமா என்கிற விவாதங்கள் அரசியல் மேடைகளில் ஒலிக்க வேண்டியவை. அரசியல் தலைவர்கள் இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவை எட்ட வேண்டியதும் அவசியம். எனினும், ஆளுநர் அந்த எல்லைக்குள் செல்ல முடியாது என்பதுதான் இதில் புரிந்துகொள்ள வேண்டியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in