மக்களவைத் தேர்தல்: மக்களுக்கான இடையூறுகள் தவிர்க்கப்பட வேண்டும்

மக்களவைத் தேர்தல்: மக்களுக்கான இடையூறுகள் தவிர்க்கப்பட வேண்டும்
Updated on
2 min read

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19இல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

கட்சிகளும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி விரைவில் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூரில் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களும் வரத் தொடங்கிவிட்டன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இலவச எம்ப்ராய்டரிங் பயிற்சிக்கான ரசீதுகளை விநியோகித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது இலவச உணவு விநியோகித்ததன் பேரிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் பங்கேற்கச் செய்தது சர்ச்சை ஆனது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. சிறாரைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது சிறார் தொழிலாகக் கருதப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி மக்களுக்கு எழுதிய கடிதம், பிரதமர் அலுவலகம் மூலம் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராகத் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

வழக்கம்போல் ஆளும் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் இலவசத் திட்டங்களை அறிவிப்பதும் நடக்கிறது. இதற்கு மாநில அரசுகளும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் வெளியான மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு இதற்கு ஓர் உதாரணம். தேர்தல் காலத்தில் காவல் துறையை ஆளும் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. தேர்தல் தொடர்பான இத்தகைய புகார்களைத் தெரிவிக்க தனியாக ஒரு செயலியைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சிவிஜில் cVigil என்கிற இந்தச் செயலி மூலம் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்துப் புகார் தெரிவிக்கலாம்.

தேர்தல் விதிமுறைகள் சாதாரண மக்களுக்குச் சிரமத்தை அளிப்பதாக மாறிவிடக் கூடாது. பல பகுதிகளில் வாகனப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரொக்கப் பணம் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் எல்லாம் மக்களுக்குச் சிரமத்தை அளிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணம், மருத்துவச் செலவு போன்ற பல விஷயங்களுக்குப் பணத்துடன் செல்வோர் இதனால் பாதிக்கப்படலாம். பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் இதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமது வியாபாரத்தில் 50 சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனையில்தான் நடப்பதாகக் கூறியுள்ள விற்பனையாளர்கள், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொண்டுசெல்ல முடியும் என்கிற வரம்பை அதிகரிக்கக் கோரியுள்ளனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் தொடங்கிவிட்டதால், தேர்தல் பிரச்சாரத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in