அரசியல் கட்சிகள் அறம் பேண வேண்டும்!

அரசியல் கட்சிகள் அறம் பேண வேண்டும்!
Updated on
2 min read

தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், மீண்டும் புதிய பட்டியலைத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்பிஐ அனுப்பியிருக்கிறது. அந்தத் தகவல்களும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. சர்ச்சைக்குரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்த விமர்சனங்களை இந்தப் புதிய பட்டியல் மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான புதிய ஏற்பாடாக தேர்தல் பத்திரங்கள் திட்டம் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு, தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று 2024 பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

மேலும் 2019 ஏப்ரல் 12 முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை 2024 மார்ச் 6க்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அந்த விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை எஸ்பிஐ அவகாசம் கேட்டது. இந்தக் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் எஸ்பிஐயிடம் ‘குறைந்தபட்ச நேர்மை’யை எதிர்பார்ப்பதாகக் கண்டித்தது. இதன் பிறகே தேர்தல் பத்திர விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. அவை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டன.

ஆனால், தேர்தல் பத்திரங்களின் எண்களை வெளியிட்டால் மட்டுமே எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்தக் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன என்பதை ஊகங்களுக்கு இடமின்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்று குரல்கள் எழுந்தன. இதையடுத்து, தேர்தல் பத்திரங்களின் எண்களையும் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார், எந்தத் தேதியில் அவை வாங்கப்பட்டன, எவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்பட்டன என்பது குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று (மார்ச் 17) இந்தத் தரவுகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் தரவுகளை வைத்து அரசியல் கட்சிகளையும் நன்கொடை வழங்கிய நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. மேலும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உள்ளான சில நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியிருப்பதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருப்பதோடு, மத்தியில் ஆளும் அரசாகவும் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளித்திருக்கும் தொகையை, ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆளுங்கட்சியாக இருக்கும் சில கட்சிகள் பெற்றிருக்கும் நிதியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்...

விகிதாச்சாரக் கணக்குப்படி பாரதிய ஜனதா கட்சிக்குச் சேர்ந்திருக்கும் நிதி பெரிய வியப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. அதேசமயம், எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்தக் கட்சிக்கு நிதி அளித்துள்ளன, எந்தச் சூழலில் அந்த நன்கொடைகள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டன என்பதையெல்லாம் கூர்மையாக ஆராயும்போது இதில் சர்ச்சைக்குரிய புதிய அம்சங்கள் வெளிப்படக்கூடும்.

எப்படியிருப்பினும், அரசியல் கட்சிகளும் ‘நன்கொடை’யும் பிரிக்க முடியாதவை என்பதுதான் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச அறத்தையேனும் பேண வேண்டும் என்கிற குரல்களை இனி புறந்தள்ள முடியாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in