காவிரி தீர்ப்பு: ஏமாற்றமும் நம்பிக்கையும்!

காவிரி தீர்ப்பு: ஏமாற்றமும் நம்பிக்கையும்!
Updated on
1 min read

கா

விரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆறு வார காலத்துக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனும் உத்தரவு தமிழகத்துக்கு மகிழ்ச்சி அளித்தாலும், நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரில் 14.75 டி.எம்.சி.யைக் குறைத்திருப்பது தமிழக விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், இந்தத் தீர்ப்பாவது முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று காத்திருக்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.

1983-ல் காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டெல்டா விவசாயிகள்தான். 19 ஆண்டுகள் தொடர்ந்த 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்தே தன்னையும் அந்த வழக்கில் சேர்க்குமாறு மனு கொடுத்தது தமிழக அரசு. 1990-ல் நிறுவப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பிறகு 2007 பிப்ரவரி 5-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி. என்று ஒதுக்கியது. தமிழகத்துக்கு உரிய 419 டி.எம்.சி.யில் மழைப் பொழிவின் மூலம் கிடைக்கும் அளவு கழிக்கப்பட்டு, 192 டி.எம்.சி.யானது.

இந்த நீரின் அளவைத்தான் தற்போது 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதைப்போல, பெங்களூருவின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு 14.75 டி.எம்.சி. கூடுதலாக வழங்கப்படுகிறது. இதுவரை நிலுவையில் இருந்த அனைத்து காவிரி நதிநீர் வழக்குகளும் இந்த உத்தரவின் மூலம் முடித்து வைக்கப்படுகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும். மேல் முறையீடு செய்ய முடியாது.

காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், அதன் மூலம் கடந்த 2,000 ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்வது தமிழகம்தான். நதி உற்பத்தியாகும் மாநிலம் அல்லது நாட்டைவிட அதைப் பயன்படுத்துவோருக்கே அதிக உரிமை எனும் சர்வதேச நடைமுறையை இத்தீர்ப்பு ஏனோ கவனத்தில் கொள்ளவில்லை.

இந்தத் தீர்ப்பை மத்திய அரசு ஒரு படிப்பினையாகக் கொள்ளவேண்டும். குறிப்பாக, காங்கிரஸும் பாஜகவும் தொடக்கம் முதலே காவிரி நதிநீர்ப் பங்கீட்டை ஒரு தேசியப் பிரச்சினையாகக் கருதவில்லை. ஓட்டுப் பிரச்சினையாகவே கருதிவந்திருக்கின்றன. விளைவாக, இன்று அந்தக் கட்சிகளே நினைத்தாலும் காவிரி பிரச்சினையில் ஒரு சுமுகமான தீர்வை அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலை இனிமேலும் தொடரக் கூடாது. நதிகள்தான் இந்தியாவின் ரத்த நாளங்கள். எனவே நதிநீர்ப் பங்கீடு விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழக அரசும் இவ்விஷயத்தில் உறுதியுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற அதிமுக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் தர வேண்டும். தமிழக விவசாயிகளின் கடைசி நம்பிக்கை தகர்ந்துபோக ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in