தமிழை வழக்காடு மொழியாக்குவதில் தயக்கம் ஏன்?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் 24 பேர் பிப்ரவரி 28 தொடங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது. தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி போராடியவர்களை மார்ச் 6 அன்று நேரில் சந்தித்ததை அடுத்துப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

‘ராமாயி மற்றும் சிலர் எதிர் முனியாண்டி கோனார் மற்றும் சிலர்’ (1978) என்ற வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழில் தீர்ப்பு வழங்கியதால், ‘தமிழில் வழங்கப்படும் தீர்ப்பு, தீர்ப்பே அல்ல’ என்று மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகுதான் சார்புநிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 1982இல் அரசாணை வெளிவந்தது.

இதனால், கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாமரர்களுக்கும் புரியும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கையின் அடிப்படை. தமிழ்நாடு அரசு 2006இல் சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் தீர்மானம் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசும் அதையே காரணம் காட்டி, இந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுள்ளது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி மொழி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் முறையே தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தன. ஆனால், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டக்கூறு 348(1)(ஏ) கூறுகிறது. ஆனால், 348இன் 2ஆவது பிரிவின் உட்கூறு (ஏ) பிரிவு (1)இல், உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மாநிலச் சட்டமன்றம் ஒன்றில், தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சரியல்ல. இதற்கான தீர்மானத்தை மத்திய அரசு நேரடியாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். 1965இல் நிறைவேற்றப்பட்ட மத்திய அமைச்சரவைத் தீர்மானம், உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அனுமதிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலும் வேண்டும் என்கிறது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பன்மொழிப் பண்பாடுதான் இந்தியாவின் தனித்துவம். அதைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in