

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடைக்காத நிலையில், இதே போல் நிகழ்ந்த முந்தைய குண்டுவெடிப்புகளின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்னும் ஊகங்களும் எழுந்திருக்கின்றன.
பெங்களூரு நகரின் புரூக்ஃபீல்டு பகுதியில் செயல்பட்டுவரும் ராமேஸ்வரம் கஃபேயில், மார்ச் 1 அன்று நண்பகலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்துக்குக் கெளரவம் சேர்க்கும் வகையில் ராமேஸ்வரம் கஃபே தொடங்கப்பட்டது; இங்கு எப்போதும் நல்ல கூட்டம் இருக்கும். இந்தச் சூழலில், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உணவகத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்திவந்த நிலையில், தேவைப்பட்டால் இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார். இதையடுத்து, மார்ச் 4 அன்று இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ வசம் ஒப்படைத்திருக்கிறது மத்திய உள் துறை அமைச்சகம்.
முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்திருக்கும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருக்கிறதா என்னும் கோணத்தில் விசாரணை நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கெனவே, தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு விசாரணைக் குழுக்கள் அனுப்பப்பட்டன.
இந்தச் சூழலில் 2022இல் மங்களூரு, ஷிவமொக்கா பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களைப் போல இந்தத் தாக்குதலும் நடந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தக் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமான ஐஇடி, முந்தைய சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட ஐஇடி-யை ஒத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் கஃபே சம்பவத்தில் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர், வெடிமருந்து வைக்கப்பட்ட பையுடன் பேருந்தில் வந்து, சாவகாசமாக ரவா இட்லி உண்ட பின்னர், கைகழுவும் இடத்தில் அந்தப் பையை வைத்துவிட்டுச் சென்றது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
எனினும், அந்த நபர் தொப்பி, முகக்கவசம், குளிர் கண்ணாடி அணிந்திருந்ததால் அவர் யார் என அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கின்றனர். பொதுவாகவே, இதுபோன்ற தாக்குதலின்போது, குற்றவாளிகள் குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு முன்பாவது உளவு வேலைகளையும், சதித் திட்டங்களையும் தீட்டுவார்கள் என்பதால், முந்தைய சிசிடிவி காட்சிப் பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளும் எழுந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ‘பெங்களூரு வெடிகுண்டு நகரமாக மாறிவிட்டது’ என பாஜகவினர் விமர்சித்திருக்கும் நிலையில், பாஜக ஆட்சிக்காலத்தில் அந்நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளைச் சுட்டிக்காட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுக்கிறது.
மக்கள் பாதுகாப்புடன் தொடர்புடைய இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் காழ்ப்புக்கு எந்தத் தரப்பும் இடமளிக்கக் கூடாது. அது குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடும்.
இக்குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.