கத்தார் இந்தியர்கள் மீட்பு: விவேகத்துக்குக் கிடைத்த வெற்றி

கத்தார் இந்தியர்கள் மீட்பு: விவேகத்துக்குக் கிடைத்த வெற்றி
Updated on
2 min read

கத்தாரில் சிறைப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டு தாய்நாடு திரும்பியுள்ளது நிம்மதி அளிக்கிறது.

இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஏழு முன்னாள் அதிகாரிகளும் முன்னாள் மாலுமி ஒருவரும் கத்தாரில் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தனர். 2022 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு, 2023 அக்டோபரில் தோஹா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது இந்தியர்களை அதிர்ச்சியடையவைத்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் கடந்த டிசம்பரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆண்டுக் கணக்கிலான சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் இந்திய வெளியுறவுத் துறை பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியைத் துபாயில் சந்தித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளும் உயர்மட்டத் தலையீடுகளும் எட்டு இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றின.

எட்டு இந்தியர்களும் சிறைத் தண்டனையிலிருந்தும் மீள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மூன்று மாதங்களுக்குள் அது சாத்தியமாகிவிட்டது; அவர்களில் ஏழு பேர் தாய்நாடு திரும்பிவிட்டனர். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகச் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, பிப்ரவரி 14 அன்று மீண்டும் தோஹாவுக்குச் சென்று கத்தார் அரசரைச் சந்தித்தார். இந்த விஷயத்தில் பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டதற்கான சான்றாக இதைக் கருதலாம்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களுக்குச் சட்டரீதியான ஆதரவையும் பிற உதவிகளையும் இந்திய அரசு அளித்துவந்தது. அதே நேரம் கத்தார் நீதிபரிபாலன அமைப்புக்கு முழு மதிப்பளித்து இந்த வழக்கைக் கையாண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை வைத்து கத்தார் அரசு குறித்துப் பொதுவெளியில் கண்டனங்களையோ கடுமையான எதிரிவினைகளையோ முன்வைக்காமல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்திய அரசு விவேகத்துடன் காரியத்தைச் சாதித்துள்ளது. பிற நாடுகள், தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசித் தமது துணிச்சலைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு உலக அளவில் அரசியல் தலைமைகள், முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்களிடையே அதிகரித்துவரும் சூழலில், இந்த விவகாரத்தில் இந்திய அரசு கடைப்பிடித்த அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.

மேற்கு ஆசியப் பகுதியில் செல்வாக்குமிக்க நாடான கத்தார் இந்தியாவின் முக்கியமான வணிகக் கூட்டாளி. சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகள் கத்தார் உடனான வணிகத்துக்குத் தடை விதித்திருந்தபோதும், இந்தியா வுடனான அந்நாட்டின் வணிகம் நிறுத்தப்படவில்லை. ஆக, கத்தாருக்கும் இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்துவருகிறது. இந்தியாவின் இயற்கை எரிவாயுத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு கத்தாரிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரில் பல்வேறு முக்கியமான சேவைப் பிரிவுகளில் எட்டு லட்சம் இந்தியர்கள் பணியாற்றிவருகிறார்கள்.

இந்தப் பின்னணியில், பாகிஸ்தான் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச தலையீட்டைக் கோரியது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா அரசின் குற்றச்சாட்டுகளுக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியது போன்று கத்தார் விவகாரத்தை இந்தியா கையாண்டிருந்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுரீதியான உறவு பாதிக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு அதைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in