பாகிஸ்தான் தேர்தல்: மக்கள் தீர்ப்புக்கு

பாகிஸ்தான் தேர்தல்: மக்கள் தீர்ப்புக்கு
Updated on
2 min read

மதிப்பளிக்கப்பட வேண்டும் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

முன்னதாகப் பல்வேறு வழக்குகளின் காரணமாகச் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ இன்ஸாஃப் கட்சி (பி.டி.ஐ) அதன் சின்னத்தில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் வேறு சில தலைவர்களும் சிறையில் உள்ளனர். இன்னும் பலர் அரசியலிலிருந்து விலகிவிட்டனர் அல்லது பிற கட்சிகளில் இணைந்துவிட்டனர். இந்தச் சூழலில், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் அரசியலில் அந்நாட்டின் ராணுவத் தலைமை கொண்டிருக்கும் ஆதிக்கம் உலகறிந்த ரகசியம். இந்தப் பின்னணியில், முன்பு ராணுவத்தின் எதிரியாக இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் அவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பி.எம்.எல்-என்) கட்சி, இந்த முறை ராணுவத்தின் ஆதரவுடன் போட்டியிட்டது.

அக்கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. மொத்தமுள்ள 265 தொகுதிகளில் 101ஐ சுயேச்சைகள் வென்றுள்ளனர். இவர்களில் 93 பேர் பி.டி.ஐ கட்சியைச் சார்ந்தவர்கள். நவாஸ் ஷெரீஃப் கட்சி 75 தொகுதிகளிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

முத்தஹிதா கெளமி இயக்கம் 17 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 134 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் அரசியல் களத்தில் பேரங்கள் தொடங்கியுள்ளன. பி.டி.ஐ-யைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளிடமும் கூட்டணி அரசு அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் நவாஸ் ஷெரீஃப். இதற்கு ராணுவத்தின் ஆதரவும் உள்ளது.

இதையடுத்து ‘அரசியல் நிலைத்தன்மைக்கு இணைந்து பணியாற்றுவதற்காக’ பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சிகளுக்கிடையே கொள்கைரீதியான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பி.டி.ஐ கட்சியும் கூட்டணி முயற்சிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

ராணுவ ஆதரவு கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்து, பி.டி.ஐ கட்சியையும் இம்ரான் கானையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகப் பேசப்படுகிறது. இம்ரான் கான் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற சுயேச்சைகள் வேறு கூட்டணி அமைக்கும் அரசுக்கு ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கப்படலாம். சுயேச்சை வெற்றியாளர்கள் சிலர் நவாஸ் ஷெரீஃப் முகாமை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியிருந்த பி.டி.ஐ கட்சியினர், முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் இறங்கிப் போராடிவருகின்றனர். இம்ரான் கானின் மக்கள் செல்வாக்கைத் தகர்க்கும் ராணுவத்தின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன. ஆளும் கட்சி மீதான அதிருப்தியையும் இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இம்ரான் கான் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அவருக்குச் சாதகமாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. எனவே அவரது கட்சியை உள்ளடக்கிய அரசு அமைவதற்கு ராணுவத் தலைமை ஒத்துழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால் மக்களின் அவநம்பிக்கையும் அதிருப்தியும் அணையா நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கும். இது பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் தொடரவே வழிவகுக்கும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in