Published : 28 Feb 2018 09:37 AM
Last Updated : 28 Feb 2018 09:37 AM

அதிகார எல்லையை விரிக்கும் ஜி ஜின்பிங்: ஆரோக்கியமான போக்கா?

சீ

ன அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதன்படி, அதிபர், துணை அதிபர் பதவியில் இருப்பவர்கள் இரண்டு முறைக்கு மேலும் தங்கள் பதவியில் நீடிக்க முடியும். இதன் மூலம், அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம், 2023-ல் முடிவடைந்த பிறகும், அதிபர் பதவியில் நீடிக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கடந்த அக்டோபரில், கட்சித் தலைவராகவும் அதிபராகவும் அவர் இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டபோதும் அவருக்கு அடுத்த தலைவராக யாருமே முன்வைக்கப்படவில்லை. சீன அரசியலில் வழக்கத்துக்கு மாறான இந்த விஷயம் நடந்தபோதே, அவர் இரண்டாம் பதவிக் காலத்தையும் தாண்டி பதவியில் நீடிப்பார் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாவோவுக்குப் பிறகு சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் கருதப்படுகிறார். அக்டோபரில் நடந்த கட்சியின் 19-வது மாநாட்டில், ஜி ஜின்பிங்கின் சிந்தனைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் விதிமுறைகளிலேயே சேர்த்துக்கொள்ளப்பட்டது என்பது அந்நாட்டின் சமீபத்திய தலைவர்களைக் காட்டிலும் ஜி ஜின்பிங் தனித்துவம் மிக்கவர் என்பதைக் காட்டியது. கம்யூனிஸ்ட் கட்சி, அரசு, ராணுவம் என்று சீனாவின் முக்கியத் தூண்களைத் தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, 2016-ல், முழு அதிகாரம் பெற்ற முக்கியத் தலைவர் (கோர் லீடர்) எனும் சிறப்பு அந்தஸ்தையே சீன கம்யூனிஸ்ட் கட்சி அவருக்குத் தந்தது. டெங் ஷியாபிங் தலைமையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்ததைப் போல், உலகளாவிய புவி அரசியலில் சீனாவின் செல்வாக்கை அவர் அதிகரித்திருக்கிறார்.

எனினும், இரண்டு முறைக்கு மேல் அதிபராகப் பதவி வகிக்க முடியாது எனும் அரசியல் சட்ட விதிகள் அவரது செல்வாக்குக்குத் தடையாக இருந்தன. தற்போது முன்வைக்கப்படும் சட்டத் திருத்தம் சீன நாடாளுமன்றத்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த தலைமுறைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்துவதற்கான பெரும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. சீன நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டிருப்பதன் மூலம், தனது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் எந்தத் தடையும் இருப்பதை விரும்பவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேசமயம், ஒருவரிடமே இத்தனை அதிகமான அதிகாரங்கள் குவிக்கப்படுவது என்பது சீனா முன்வைக்கும் கூட்டுத் தலைமைக்கு முரணானது.

இது அதிகார மட்டத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். டெங் ஷியாபிங் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு, ஸ்திரத்தன்மை யைக் கொண்டுவரும் வகையில், சீனாவில் அதிபர் பதவிக் காலத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. ஜி ஜின்பிங்குக்கு முந்தைய இரண்டு அதிபர்களும் தங்களது இரண்டாவது பதவிக் காலத்துக்குப் பிறகு பதவி விலகியதன் மூலம்தான் புதிய தலைமுறைத் தலைவர் கள் உருவாக முடிந்தது - ஜி ஜின்பிங் உட்பட! இந்நிலையில், இதில் மாற்றம் செய்திருப்பதன் மூலம், சீனாவில் ஒருகாலத்தில் நிலவிய தனிநபர் வழிபாடு, அதிகாரப் போட்டிகள் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறார் ஜி ஜின்பிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x