இஸ்ரேலின் இனப்படுகொலை: முற்றுப்புள்ளிக்கான தொடக்கம்!

இஸ்ரேலின் இனப்படுகொலை: முற்றுப்புள்ளிக்கான தொடக்கம்!
Updated on
2 min read

காசாவில் இனப்படுகொலை செயல்பாடுகளைத் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்றாலும், காசா மக்கள் மீதான இனப்படுகொலைச் செயல்பாட்டைத் தடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டிருப்பது, இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.

பல பத்தாண்டுகளாக, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல் தற்போதைய பிரச்சினைக்கு முக்கியக் காரணமானது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,139 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஆனால், இதற்குப் பழிவாங்கும் விதத்தில் ‘முழுமையான வெற்றி கிடைக்கும்வரை போர் தொடரும்’ என்ற சூளுரையுடன் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தொடர் தாக்குதலில், இதுவரை 26,083 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 64,487 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாடும் குழந்தைகள் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால், அதைவிடவும் படுமோசமான தாக்குதல்களை நடத்தி, பல மடங்கு உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்குரியது. இது குறித்து சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்புகளை இஸ்ரேல் தனக்கே உரிய பாணியில் கையாண்டதுடன், பாதிக்கப்பட்ட தரப்பாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டு, பாலஸ்தீன மக்களைக் கொன்றழிக்கும் தாக்குதலைத் தொடர்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது தென் ஆப்ரிக்கா. இஸ்ரேலுக்கு எதிராகத் தென் ஆப்ரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், காசா மீது இஸ்ரேல் நிகழ்த்தியவற்றில் குறைந்தபட்சம் சில செயல்பாடுகள் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையின் (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஷரத்துக்களுக்கு உட்பட்டவை என சர்வதேச நீதிமன்றம் கூறியிருக்கிறது. மருத்துவமனைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக நீதிபதிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

17 நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்கொண்ட இந்த விசாரணையில், 15 – 2 எனும் பெரும்பான்மையுடன் காசா மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுப்பதற்கான ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருக்கிறது. காசா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளையும், அடிப்படைச் சேவைகளையும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றதாக இஸ்ரேல் முன்வைக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியூட்டுகிறது. அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த அமைப்புக்குச் சர்வதேச நிதி உதவி வழங்கப்படுவதை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தடுத்து நிறுத்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

காசாவின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் இனப்படுகொலைகளைத் தடுக்க சர்வதேச அளவில் முதல் குரல் எழுந்திருக்கிறது. இது மேலும் வலுவடைந்து, இஸ்ரேலின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புவோம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in