ஏசர் அறிக்கை: கற்றல் விளைவுகள் மேம்பட வேண்டும்

ஏசர் அறிக்கை: கற்றல் விளைவுகள் மேம்பட வேண்டும்
Updated on
2 min read

இந்தியாவின் கிராமப்புறங்களில் பதின்பருவத்தினரில் கணிசமானோர் அடிப்படைக் கணிதத்திலும், வாசிக்கும் திறனிலும் பின்தங்கியிருப்பதாக, ‘கல்வியின் நிலை குறித்த ஆண்டு அறிக்கை (Annual Status of Education Report - 2023)’ தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.

‘பிரதம் கல்வி அறக்கட்டளை’ என்னும் அரசுசாரா நிறுவனம், இந்தியாவில் கல்வியின் நிலை குறித்த கணக்கெடுப்பை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி ‘ஏசர்’ அறிக்கையை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் ‘ஏசர் 2023: அடிப்படைகளுக்கு அப்பால்’ என்னும் தலைப்பிடப்பட்ட அறிக்கை, 2024 ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டது. 26 இந்திய மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களின் கிராமப்புறங்களில் 14-18 வயதுடைய மாணவர்களிடையே இதற்காகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 25% மாணவர்களால் தமது தாய்மொழியில் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்க முடியவில்லை, பாதிக்கு மேற்பட்டோருக்கு நான்காம் வகுப்புக்குள் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டிய அடிப்படைக் கணக்குகளுக்குத் தீர்வுகாணத் தெரியவில்லை.

கல்வியிலும் மாணவர் சேர்க்கையிலும் தேசிய அளவில் முன்னணியில் உள்ள மாநிலம் தமிழ்நாடு; அங்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 60 கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 21.4% மாணவர்களால் இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிக்க முடியவில்லை. அதேவேளையில், அந்த வகையிலும் தேசிய சராசரியைவிடத் தமிழ்நாடு முன்னேறியுள்ளது ஆறுதலுக்குரியது. என்றாலும், இந்த அவலநிலை களையப்படுவதற்குத் தீவிர நடவடிக்கைகள் தேவை.

இந்த அறிக்கை வேறு சில முக்கியப் பிரச்சினைகளையும் கவனப்படுத்தியுள்ளது. அடிப்படைக் கணிதம், ஆங்கில வாசிப்புத் திறனில் பெண்களைவிட ஆண்கள் ஒப்பீட்டளவில் மேம்பட்டிருப்பதாகவும் 10ஆம் வகுப்புக்குப் பிறகு அறிவியல் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பவர்களில் ஆண்களைவிட (36.3%) பெண்கள் (28%) குறைவாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கல்வியில் நிலவும் பாலின இடைவெளிகளையும் சமூகரீதியான பாகுபாடுகளையும் நீக்க வேண்டிய அவசியத்தை இவை உணர்த்துகின்றன.

கணக்கெடுப்பில் பங்கேற்ற 90% மாணவர்கள் திறன்பேசி வைத்திருப்பவர் களாகவோ அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பவர்களாகவோ இருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பல மாணவர்களிடம் இல்லை. திறன்பேசி, இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இன்றியமையாதவை ஆகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இணையப் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியத்தையும் நாம் உணர வேண்டியிருக்கிறது.

கணக்கெடுப்பில் பங்கேற்ற 86.8% மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘நிபுண் பாரத் மிஷன்’ போன்ற திட்டங்களின் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவைப் புகட்டுவதில் அனைத்து மாநிலங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கவனப்படுத்தியிருக்கிறது.

கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மூலமாக 6-14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பள்ளிக் கல்வி பெறுவது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. ஆனால், 14 வயதுக்குப் பிறகு அடிப்படைப் பாடங்களில் தேர்ச்சி இல்லாததால் உயர் வகுப்புகளில் பல மாணவர்கள் தத்தளிக்கும் அவலநிலை தொடர்கிறது. இது மாற்றப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் தமது வயதுக்குரிய கற்றல் அடைவுகளைப் பெற்றிருப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் தீவிரக் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in