எண்ணூர் வாயுக் கசிவு: மக்கள் பாதுகாப்பே முக்கியம்

எண்ணூர் வாயுக் கசிவு: மக்கள் பாதுகாப்பே முக்கியம்
Updated on
1 min read

டிசம்பர் 26, 2023 நள்ளிரவு, எண்ணூர் பெரியகுப்பத்தில் அமைந்துள்ள கோரமண்டல் உர உற்பத்தி ஆலைக்குச் செல்லும் அமோனியா வாயு கசிந்ததில், அப்பகுதிவாழ் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ஆலையிலிருந்து ஏற்பட்ட வாயுக் கசிவை உணர்ந்த வழிப்போக்கர்கள் சிலர்தான் பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதி மக்களை எச்சரித்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் உள்பட அப்பகுதி மக்கள் உயிர் பயத்துடன் 2 கி.மீ. தொலைவு கடந்துசென்று பிழைத்துள்ளனர்.

சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாலையிலேயே ரத்த வாந்தி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 45 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த ஆலைக்குக் கப்பலிலிருந்து கடல் மார்க்கமாகக் குழாய்களில் அமோனியா எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அப்படி எடுத்துச் செல்லப்படும் குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், கோரமண்டல் நிறுவனம் இந்தக் குழாய்களை முறையாகப் பராமரிக்காததுதான் விபத்துக்கான காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், இம்மாதிரியான சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தங்கள் குழந்தைகள் ஏற்கெனவே எதிர்கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கும் அம்மக்கள், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.

இந்த வாயுக் கசிவால் கடல் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 அன்று ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் எண்ணூர் பகுதியில் உள்ள சில நிறுவனங்களின் ஆலைக் கழிவுகள் கசிந்து, கொற்றலை ஆற்றில் கலந்து எண்ணூர் கழிமுகம் வரை பாதிப்புகளை உண்டாக்கின.

தமிழ்நாடு அரசு எண்ணெய்ப் படலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழக்குவதாக அறிவித்தது. ஆனால், கடலில் கலந்த எண்ணெய்ப் படலம் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.

ஆலைக் கழிவுகளைக் கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விபத்து நடந்த பின்புதான் அதற்கான ஆய்வை நடத்துகிறது. இப்போது விபத்து நடந்துள்ள ஆலை விவகாரத்திலும் இதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிக்கவுள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், தமிழ்நாடு அரசு ஆலைக் கழிவு வெளியேற்றம், கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஆலைகளின் பராமரிப்பு ஆகியவை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மற்ற நாடுகளில் இதுபோன்ற எண்ணெய்க் கசிவு, தொழிற்சாலை விபத்துகளுக்குக் காரணமான தொழிற்சாலை மூடப்படும். ஆனால், இங்கு அவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கான சட்டங்கள் இல்லை; இருக்கும் சட்டங்களும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசு, இது போன்ற சம்பவங்களை வெறும் விபத்தாகக் கடந்துவிடாமல் இவை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in