

வா
ராக்கடன் பிரச்சினை தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நிதி உறுதித்தன்மை பற்றிய அறிக்கை, இப்பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடாது என்பதையே காட்டுகிறது. அரசுத் துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையும் பெரிய தொழில் நிறுவனங்களின் நிலுவைக் கடன் பிரச்சினையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடைகளாக இருப்பவை. இவற்றைக் களைவதில் அரசின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வங்கித் துறையில் இருந்த மொத்த வாராக்கடன் மதிப்பு கடந்த மார்ச்சில் 9.6% ஆக இருந்தது, செப்டம்பர் இறுதியில் 10.2% ஆகிவிட்டது. 2018 செப்டம்பரில் வாராக்கடன் மதிப்பு 11.1% ஆக உயரும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்த வாராக்கடன் பிரச்சினை இதுவரை அரசுத் துறை வங்கிகளில்தான் அதிகமாக இருந்தது. இப்போது தனியார் வங்கிகளுக்கும் பரவிவிட்டது. தனியார் வங்கிகளின் வாராக்கடன் செப்டம்பர் மாத இறுதியில் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% அதிகரித்துவிட்டது. அரசுத் துறை வங்கிகளில் அது 17% ஆக இருக்கிறது. வங்கிகளுக்குப் போட்டியாகச் செயல்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களிலும் வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. ஆனாலும், கடன் கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கிகளை வலுப்படுத்தவும் எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. திவால் சட்ட நடவடிக்கைகள் மூலம், கடன் நிலுவை வைத்துள்ள நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விட்டு, கடனை வசூலிக்கத் தொடங்கியதும் நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கும். தேசிய கம்பெனிச் சட்ட நடுவர் மன்றம் மெதுவாகச் செயல்பட்டாலும், அது வகுத்துள்ள வழிகாட்டு நெறிகள் எதிர்காலத்தில் வங்கிகள் வாராக்கடன்களில் சிக்கும் ஆபத்தைக் குறைக்க உதவக் கூடும். அரசுத் துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு செய்வது என்ற அரசின் முடிவால், புதிதாகக் கேட்பவர்களுக்குக் கடன் கிடைத்துவிடும். அது பொருளாதார நடவடிக்கைகளையும் தூண்டிவிடும்.
வாராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதும், மறு முதலீடு அளிப்பதும் பெரிய தீர்வின் சிறு பகுதிகள்தான். எந்த மாதிரியான திட்டங்களுக்குக் கடன் கொடுக்கிறோம், எவ்வளவு கொடுக்கிறோம், ஈடாக பிணை வைக்கப்படும் சொத்துகளின் உண்மையான மதிப்பு என்ன என்றெல்லாம் சரியாக ஆராயாமல் கடன் வழங்கப்பட்டதால் வங்கிகள் இந்த நிலைக்கு வந்துள்ளன. அடிப்படையான இந்த அம்சத்தைச் சீர்திருத்தாமல், ஏனைய பரிகார நடவடிக்கைகளால் பலன் கிடைத்துவிடாது.
வங்கிகளின் வேலையே தொழில், வர்த்தகத் துறைகளுக்குக் கடன் வழங்குவதுதான். ஆனால் அப்படித் தரும் கடனையும் அறிவியல்ரீதியாகச் சிந்தித்து, உரிய கவனத்துடன் அளிப்பது அவசியம். அரசுத் துறை வங்கிகளில் அரசு தனக்குள்ள பங்கை (பங்கு உரிமை) குறைத்துக்கொண்டு, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவையாக மாற்ற வேண்டும் என்ற பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) பரிந்துரையை அரசு பரிசீலிக்க வேண்டும். வங்கித் துறையின் அடித்தளக் கட்டமைப்பையே சீர்திருத்துவதுதான் நீண்ட காலத் தீர்வாக இருக்க முடியும்!