

மு
ம்பையில் கமலா மில்ஸ் வளாகத்தின் சிற்றுண்டி விடுதி யில் கடந்த வியாழன் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம், பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியத்தின் மோசமான விளைவுக்கு மற்றும் ஒரு உதாரணம். கட்டிடத்தின் மின் வயர்களில் பிடித்த தீ விரைவாகப் பரவியதில், மொட்டைமாடியில் இயங்கிவந்த உணவகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காகக் கூடியிருந்தவர்கள் தீயில் சிக்கிப் பலியாகியிருக்கிறார்கள். தீயைவிட தீப்புகையால் மூச்சுத் திணறி இறந்தவர்களே அதிகம். மும்பையின் சகி நாகா பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் தின்பண்டங்கள் தயாரிப்பு ஆலையில் 12 தொழிலாளர்களின் உயிரைக் குடித்த விபத்துக்குப் பிறகு நடந்திருக்கும் இன்னொரு கோர சம்பவம் இது.
கமலா மில்ஸ் வளாகத்தில், அவ்வளவு பேர் கூடியிருந்த அந்த இடத்தில், வெளியேறும் வழி குறுகலாகவும், அடையாளம் காண முடியாத வகையிலும் இருந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. ஹோட்டல்கள், ஆலைகள், திருமணக் கூடங்கள், பள்ளிக்கூடங்கள், மால்கள், வீடுகள் என்று எல்லாவற்றுக்குமே கட்டிட விதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றைப் பின்பற்றுவதில் காட்டப்படும் அலட்சியம் பெரும் உயிரிழப்புக்குக் காரணமாகிவிடுகிறது. 1997-ல் டெல்லி ‘உபஹார்’ திரையரங்கில் நடந்த தீ விபத்தில் 59 பேர் இறந்த சம்பவம் பாதுகாப்புக் குறைபாடு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்தியது. எளிதில் வெளியேற முடியாதபடி அரங்கின் வாயில்களை அடைத்துக்கொண்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாதிரியான விபத்துகளுக்குப் பிறகு, விசாரணை நடத்தும் அமைப்புகள் அந்த விவரங்களைப் பொதுவில் வெளியிடுவது கிடையாது. இத்தகைய தீ விபத்துகளை அரசு அதிகாரிகளை விட்டு விசாரிப்பதைவிட தீத்தடுப்பு நிபுணர்களைக் கொண்டு விசாரிப்பது அவசியம். பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டிடங்கள், வளாகங்களை நடத்துபவர்கள், இதுபோன்ற இடங்களில் தொழில், வணிகம் செய்பவர்கள் ஆகியோரே இந்த உயிரிழப்புகளுக்கும் பொறுப்பாக்கப்பட வேண்டும். அத்துடன் சட்டப்படி விசாரித்து அவர்களுக்குத் தண்டனைகளும் வழங்க வேண்டும். கட்டிட விதிகள் சமரசமின்றிப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதிசெய்ய வேண்டும். அடிக்கடி எல்லாப் பகுதிகளிலும் பொதுக் கட்டிடங்களைப் பரிசோதித்து ‘ஆபத்தில்லை’ என்று சான்றுரைக்க வேண்டும். அதன் பிறகே அங்கு தொழில்புரிய அனுமதி தர வேண்டும்.
இதுபோன்ற இடங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு அவசியம். உபஹார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒரு சங்கமாக இணைந்து சட்டரீதியாக மேற்கொண்ட போராட்டம், நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகளை வெளிக்கொணர்ந்தது. இவ்விஷயத்தில் கடுமையான சட்டங்கள் இல்லாதது, வழக்குகள் தாமதமாக நடப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு, பாதுகாப்பு விஷயத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வின்மை போன்றவற்றின் கூட்டு விளைவுதான் இதுபோன்ற விபத்துகளும் உயிர்ப்பலிகளும். இனியும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை மறந்துவிடக் கூடாது!