Published : 04 Jan 2018 09:23 AM
Last Updated : 04 Jan 2018 09:23 AM

அழிக்கப்படும் வனப் பகுதிகளை ஈடுசெய்வதில் தாமதம் ஏன்?

ழிக்கப்படும் வனங்களுக்கு ஈடாகப் புதிய வனங்களை வளர்ப்பதற்கான இழப்பீட்டு நிதிச் சட்டத்தை(2016) அமல்படுத்த விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது மத்திய அரசு. ஒருபக்கம் அரசின் வளர்ச்சித் திட்டங்களாலும் இயற்கையான காரணங்களாலும் வனங்களின் பரப்பளவு குறைந்துகொண்டேவருகிறது. மறுபக்கம், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, இத்தகைய மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஒரு அரசு, தானே எடுத்த முடிவின் அடிப்படையிலான நடவடிக்கையைக் கூடத் தொடரவில்லை என்றால், அதன் அக்கறையின்மையை எப்படி எடுத்துக்கொள்வது?

சர்தார் சரோவர் அணைத் திட்டம் போன்ற பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில்கூட, அழிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குப் பதில் வேறிடங்களில் காடுகளை வளர்க்கும் முயற்சிகள் அக்கறையுடன் செயல்படுத்தப்படவில்லை. புதிய வனங்களை உருவாக்குவதற்கான இழப்பீட்டு நிதியத்தில் சேர்ந்திருக்கும் தொகை ரூ.40,000 கோடி. அழிக்கப்பட்ட வனங்களின் வளம் அதிகம் என்பதைப் பறைசாற்றும் தொகை இது. அத்துடன், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சுற்றுப்புறச் சூழல் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை. அம்மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி காற்றில் கலந்துள்ள கரித்துகள் அளவை அகற்ற, தொடர்ந்து பராமரிக்கப்படும் வனப் பகுதிகள் அவசியம்.

இந்நிலையில், இப்போது மத்திய அரசு செய்ய வேண்டியதெல்லாம் நாட்டின் அனைத்து வன வளர்ப்பு, பாதுகாப்புத் திட்டங்களையெல்லாம் ஒரே அமைப்பின் கீழ் தணிக்கைக்குக் கொண்டுவந்து, நிதியை முறையாகத் திருப்பிவிடுவதுதான். சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டு, அதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற உதவ வேண்டும். அழிக்கப்பட்ட வன நிலங்களுக்கு இணையான பரப்பளவில் பெரும் நிலப்பகுதியைப் போதிய பாதுகாப்பு வசதிகளோடு வனத் துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய பெரும் நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். வனப் பகுதியை விரிவுபடுத்த அறிவியல்ரீதியிலான தேசியத் திட்டம் அவசியம்.

வன வளர்ப்பு என்றால், எந்தவிதமான மரங்களையும் எல்லா இடங்களிலும் வளர்த்துவிடலாம் என்பதல்ல. மண்ணின் தன்மை, நீர்ப்பிடிப்பு மற்றும் சுற்றுப்புறத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, உரிய மரங்களையும் தாவரங்களையும் வளர்ப்பது. அதில் பூச்சிகள், பறவைகள், புழுக்கள், பிராணிகள், விலங்குகள், நீர்வாழ்வன ஆகியவையும் பெருக இடம்தருவது போன்றவை அடிப்படையான தேவைகள். இதற்கு 2016-ல் இயற்றப்பட்ட சட்டத்தை விரைந்து அமல்படுத்துவது அவசியம். வனங்களின் மதிப்பை அறிய இப்போது கையாளப்படும் முறை காலத்தால் பிந்தையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அழிக்கப்பட்ட வனங்களுக்குப் பதிலாகப் புதிய வனங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்னர் நீதித் துறைதான் தனது உத்தரவுகள் வாயிலாக வலியுறுத்திவந்தது. இப்போது மத்திய அரசே சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், அதை அமல்படுத்துவதற்கு ஏற்ப விதிகளை உருவாக்குவதில் தாமதம் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x