

பழைய கமிட்டி அறிக்கைகளைப் பரிசீலனைசெய்வதில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசு, அவற்றில் சிலவற்றை அமல்படுத்தவும் நினைக்கிறது. அதில் தவறில்லைதான்.
எனினும், அந்த நடவடிக்கைகள் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். குறிப்பாக, குற்றவியல் நீதி வழங்கல் முறையை ஆராய்ந்து நீதிபதி வி.எஸ். மலிமத் தலைமையிலான குழு 2003-ல் வழங்கியிருந்த பரிந்துரைகளைக் கையாள்வதில் மத்திய அரசுக்குக் கூடுதல் கவனம் தேவை.
‘மூத்த போலீஸ் அதிகாரியிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்குக்கு ஆதாரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பன உள்ளிட்ட விபரீதமான பரிந்துரைகள் மலிமத் கமிட்டி அறிக்கையில் உள்ளன. ஒருவரைக் குற்றவாளி என்று தீர்மானிப்பதற்கான ஆதாரங்கள் விஷயத்தில், இந்த கமிட்டி செய்யும் பரிந்துரைகள், நீதிமன்ற நடைமுறைகளின் தரத்தைத் தாழ்த்தவே உதவும். அதேசமயம், குற்றவியல் நடைமுறைச் சட்ட அமல் தொடர்பாக, புலன் விசாரணை தொடங்கி நீதி வழங்குவது வரையிலான கட்டம் வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பன போன்ற ஏற்கத்தக்க பரிந்துரைகளும் இதில் உண்டு.
மலிமத் கமிட்டி மொத்தம் 158 பரிந்துரைகளை அளித்தது. அவற்றில் சில ஏற்கெனவே சட்டமாகிவிட்டன. சாட்சிகளின் வாக்குமூலத்தை வீடியோ மூலம் பதிவுசெய்து பயன்படுத்தலாம் என்பன போன்ற சில பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. அதேசமயம், உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சியமாக ஏற்க வேண்டும் எனும் பரிந்துரையும், போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கான நாட்களை 15-லிருந்து 30 ஆக உயர்த்த வேண்டும் எனும் பரிந்துரையும் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவை பயங்கரவாதத்துக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்தவை. பொதுக் குற்றவியல் சட்டத்தில் இவற்றைச் சேர்க்க எந்த அவசியமும் இல்லை.
‘எதிரி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டும்’ என்ற இப்போதைய தரத்தைக் குறைக்கும் வகையில்தான் மலிமத் கமிட்டியின் சில யோசனைகள் இருக்கின்றன. குற்றச்சாட்டில் ஏதோ உண்மை இருக்கிறது என்று நீதிமன்றம் நினைத்தால்கூட போதும் என்கிறது ஒரு பரிந்துரை. இது விபரீதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.
குற்றவியல் நடைமுறைச் சட்ட அமலில் பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றுக்குச் சீர்திருத்தம் அவசியம் என்பது உண்மையே. மாதவ மேனன் தலைமையிலான கமிட்டி 2007-ல் அளித்த பரிந்துரைகளும் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்படுவது அதிகமாக இருந்தாலும் தண்டனை அளிக்கப்படுவது குறைவாகவே இருக்கிறது. குற்றவாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது, நீதி வழங்கலில் ஊழல் நிலவுகிறது என்ற சந்தேகங்களால் நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை தேயத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், குற்றவியல் வழக்குகளில் நீதி வழங்குவதை மிகுந்த எச்சரிக்கையோடும் அக்கறையோடும் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள சிவில் உரிமைகளைக் காவல் துறையோ மற்றவர்களோ மறுப்பதற்கு இடம் கொடுத்ததைப் போலாகிவிடும்.
குற்றவியல் நடைமுறை விசாரணைகளும் வழக்கு நடைமுறைகளும் நேர்மையான நீதி வழங்கும் முறைமையைக் குலைத்துவிட அனுமதிக்கவே கூடாது!