Published : 09 Jan 2018 08:46 AM
Last Updated : 09 Jan 2018 08:46 AM

வங்கதேசக் குடியேறிகளை என்ன செய்யப்போகிறோம்?

ச்ச நீதிமன்றத்தின் இடைவிடாத தூண்டுதல் காரணமாகத் தனது குடிமக்கள் தேசியப் பதிவேட்டின் முதல் வரைவுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அசாம் அரசு. 3.29 கோடி மனுதாரர்களில் 1.9 கோடிப் பேர் குடிமக்கள் என்று முதல் பட்டியலில் ஏற்கப்பட்டிருக்கிறது. எஞ்சியவர்களின் ஆதாரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று அசாம் அரசு உறுதியளித்திருக்கிறது. எனினும், இது இறுதிவடிவம் பெறும்போது மேலும் சிக்கல்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்சினை இது. 1980-களின் நடுப்பகுதியில் இந்தப் பிரச்சினையையொட்டி ஆறு ஆண்டுகள் போராட்டங்கள் நடந்தன. அசாமில் குடியேறியிருக்கும் அந்நியர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து 1985-ல் அசாம் கண பரிஷத் ஆட்சிக்கு வந்தது. அதே வாக்குறுதியை முன்வைத்து 2016-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது.

அந்நியர்கள் ஊடுருவல் தொடர்பாக அசாம் அரசியல் கட்சிகள் முன்வைக்கும் வாதங்களுக்கும், உண்மையில் நடப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. மேற்கு வங்கத்திலிருந்துதான் வங்கதேசத்தவர்கள் ஊடுருவுகின்றனர். அந்நியர்கள் ஊடுருவுவது ஒருகட்டத்தில் வரம்பு மீறிப் போனதால் எதிர்ப்பு அதிகரித்தது. குடியேறும் அந்நியர்கள் தங்களுக்கு வாக்கு வங்கிகளாக இருப்பதால் சில கட்சிகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்தன.

இப்பிரச்சினையில் ஒரு முக்கியமான அம்சத்தைக் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதால் இவர்களில் யார் இந்தியர், யார் இந்தியர் அல்லாதவர் என்று அடையாளம் காண்பது எளிதல்ல. ஏனென்றால், அசாமில் குடியேறியவர்கள் மகன்-மகள், பேரன்-பேத்திகளோடு மூன்றாவது தலைமுறையையும் எட்டிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தியாதான் தெரியும். இவர்களை வெளியேறச் சொன்னால் எங்கே போவார்கள்? மேலும், இவர்களைத் திருப்பி அனுப்பினால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கதேசத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் இந்தியா செய்துகொள்ளவில்லை. எனில், இப்பிரச்சினையை அணுகுவதில் பொறுமை வேண்டாமா?

இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த இந்து அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்திருப்பது பிரச்சினையை மேலும் அதிகரித்திருக்கிறது. அசாமில் குடியேறிய வெளிநாட்டவரை அடையாளம் கண்டு திருப்பி அனுப்புவது தொடர்பாக மக்களவைத் தேர்தலின்போது பாஜக அறிவித்த இறுதி கெடு நாள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு இடையூறாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக அரசு இந்த அணுகுமுறையைக் கைவிட்டுவிட்டு, வங்கதேசத்துடனான எல்லையை வேலியிட்டு அடைப்போம் என்ற வாக்குறுதியை முதலில் நிறைவேற்ற வேண்டும். இந்திய எல்லையையொட்டிய பகுதிகளைச் சேர்ந்த வங்கதேசிகள் இந்தியா வந்து வேலை செய்ய ‘பணி அனுமதி’ அட்டை தந்தால் அவர்களை அடையாளம் காண்பதும், வேலை முடிந்த பிறகு அவர்கள் நாடு திரும்புவதும் எளிதாக இருக்கும். இந்தப் பிரச்சினையையும் மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது மிகமிக அவசியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x