மராத்தாக்கள் இடஒதுக்கீடு: வறுமைக்குத் தீர்வாகுமா?

மராத்தாக்கள் இடஒதுக்கீடு: வறுமைக்குத் தீர்வாகுமா?
Updated on
2 min read

சட்ட விதிமுறைகளின்படி பிற்படுத்தப்பட்ட சமூகமாக வகைப்படுத்தப்படாவிட்டாலும், வட இந்தியாவில் அரசியல்ரீதியாகச் செல்வாக்கு மிகுந்த சமூகங்கள், தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிவருகின்றன. மகாராஷ்டிரத்தில் மராத்தாசமூகத்தவருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டங்களும் அத்தகையவைதான். அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரத்தில் 1967இலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 35% பேர் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுதந்திர இந்தியாவில் மகாராஷ்டிரத்தின் முதலமைச்சரான 18 பேரில், 12 பேர் மராத்தாக்கள். பொருளாதாரரீதியிலும் மராத்தாக்களின் ஆதிக்கம் குறைந்துவிடவில்லை.

குறிப்பாக, கிராமப்புற மகாராஷ்டிரத்தில் முக்கால்வாசி விவசாய நிலங்கள் மராத்தாக்கள் வசமே உள்ளன. 2011-12 இந்திய மனித வளர்ச்சிக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, தனிநபர் செலவினத்தைப் பொறுத்தவரை பிராமணர்கள் மட்டுமே மராத்தாக்களை முந்தியிருக்கின்றனர். மராத்தாக்களிடையே நிலவும் வறுமை, பிற முற்பட்ட சமூகத்தினருடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அனைத்தையும்விட மராத்தாக்களிடையே நிலவும் வறுமை குறைவானது. சமூகரீதியிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்னும் பிரிவுக்குக் கீழ் மராத்தாக்களுக்கு 2018இல் வழங்கப்பட்ட 16% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் 2021இல் ரத்து செய்ததற்கான காரணத்தை இவற்றிலிருந்தே தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், மராத்தாக்களிடையே மீண்டும் இடஒதுக்கீடு கோரிக்கை எழுந்திருப்பதற்கு அச்சமூகத்துக்குள் கல்வி-வருமானத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதே முதன்மையான காரணம். மராத்தாக்களில் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரின் சராசரி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,750 என்றும், குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினரின் சராசரி தனிநபர் வருமானம் அதில் பத்தில் ஒரு பங்கு என்றும் 2011-12 மனித வளர்ச்சிக் கணக்கெடுப்பு கண்டறிந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகும் இந்த வருமான ஏற்றத்தாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதோடு, மராத்தாக்களின் பெருவாரியானோரின் வாழ்வாதாரம் கிராமப்புறங்களைச் சார்ந்திருப்பதும் அந்த மாநிலத்தில் நீண்ட காலமாகத் தொடரும் வேளாண் நெருக்கடியும் அந்தச் சமூகத்தினரிடையே கசப்புணர்வை அதிகரித்து இடஒதுக்கீட்டுக் கோரிக்கை எழுவதற்குக் காரணமாகியிருக்கின்றன.

இப்போது மீண்டும் எழுந்துள்ள போராட்டங்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு, மராத்தாக்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. மராத்தாக்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் அவர்களுக்கு ‘குன்பி’ சான்றிதழை வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இது மகாராஷ்டிரத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சிலரே இந்தக் குழு கலைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

ஆதிக்க வலிமை மிக்க சமூகங்கள் இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டங்களை நிகழ்த்தும்போதெல்லாம் அந்தச் சூட்டைத் தணிப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியான தீர்வல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் முறையான சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்தி, எந்தெந்தச் சமூகங்கள் உண்மையிலேயே சமூகரீதியிலும் கல்வியிலும் பின்தங்கியிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போதுதான் அது அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லும். அதோடு இடஒதுக்கீடு என்பது வறுமையை நீக்குவதற்கான நடவடிக்கை அல்ல என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in