

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் பாஜகவின் செல்வாக்கு முன்பைவிட அதிகமாகியிருப்பதைப் பறைசாற்றியிருக்கின்றன. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம், அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பிரதமர் மோடியும் பாஜகவும் தக்கவைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கும் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் பிரதமர் மோடியுடன், மத்திய அரசின் நலத்திட்டங்களும் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டன. கூடவே, இந்த அபார வெற்றியானது, பாஜக கட்சி அமைப்புக்குள்ளும் மத்தியத் தலைமையின் செல்வாக்கைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இரண்டு தேசியக் கட்சிகளுமே மகளிர், பழங்குடிகள், இளைஞர்களைக் கவர்வதற்கான ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருந்தன. அதையும் தாண்டி, பாஜக வெற்றிபெற்றிருப்பதற்கு இந்து மத வாக்காளர்களைக் குறிவைத்து அக்கட்சி மேற்கொண்ட பிரச்சாரம் பங்களித்திருப்பதை மறுக்க முடியாது. பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கையிலெடுத்த காங்கிரஸின் உத்தி கைகொடுக்கவில்லை. வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள், சித்தாந்தத்தில் தெளிவின்மை, உள்கட்சிப் பூசல்கள், ஒத்த சிந்தனையுடைய பிற கட்சிகளை அரவணைக்காதது எனப் பல காரணிகள் காங்கிரஸுக்குத் தோல்வியைப் பரிசளித்துள்ளன.
இதன் மூலம், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்தத் துடிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கேள்விக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறவிருந்த இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்ததாகக் கூறப்பட்டாலும், காங்கிரஸ் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்குப் பிற கட்சிகள் தயாராகிவிட்டனவா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஐந்து மாநிலங்களில், தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. பத்தாண்டுகளாக அம்மாநிலத்தை ஆண்டுவந்த கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ர சமிதியின் ஆட்சியில், வாரிசு அரசியல் மீதான மக்களின் அதிருப்தியே அக்கட்சியின் தோல்விக்கு முதன்மையான காரணம். எனினும், காங்கிரஸின் வெற்றியில் அதன் சரியான உத்திகளுக்கும் கடின உழைப்புக்கும் சமமான பங்குள்ளது. ஆதிக்க சாதியினர், பட்டியல் சாதியினர், மதச் சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியின் உழைப்பும் பட்டியல் சாதித் தலைவர் மல்லு பட்டி விக்ரமர்காவின் செல்வாக்கும் அக்கட்சிக்கு வலுசேர்த்தன.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இனவாத தேசியம், மதவாதம் ஆகியவற்றைத் தாண்டி ஸோரம் மக்கள் இயக்கம் வென்றிருப்பது அக்கட்சியின் ஊழல் ஒழிப்பு, இளைஞர் நலனை மையப்படுத்திய அரசு என்பன போன்ற வாக்குறுதிகளுக்கு மக்களிடையே ஆதரவு இருப்பதைத தெளிவுபடுத்தியுள்ளது.2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்குக் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் பாஜக எதிர்ப்பு என்பதைத் தாண்டி, மாற்றுத் திட்டங்களை முன்னிறுத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அதேவேளையில், அப்படியான வியூகங்களையும் முறியடிக்கும் ஆற்றல் பாஜகவுக்கு உண்டு என்பதால், மக்களவைத் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது