ஆட்சியர்கள் ‘கள ஆய்வு’ - மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமா?

ஆட்சியர்கள் ‘கள ஆய்வு’ - மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமா?
Updated on
2 min read

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வுசெய்து, மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்னும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு இயந்திரத்துக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் இதுபோன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவை. என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கள ஆய்வுத் திட்டங்களால் விளைந்திருக்கும் பயன்களை இந்தத் தருணத்தில் சீர்தூக்கிப் பார்ப்பதும் அவசியமாகிறது. இந்தப் புதிய திட்டத்தின்கீழ், ‘மாவட்ட ஆட்சியர்கள் இனி ஒவ்வொரு மாதமும் ஒருநாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வர்’ என்று தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஏற்கெனவே, ‘களத்தில் முதல்வர்’ என்னும் திட்டத்தை 2023 பிப்ரவரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அரசின் நலத்திட்டங்களும் பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகளும் முறையாக மக்களைச் சென்று சேர்கின்றனவா என்பதையும் முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வதே அத்திட்டத்தின் நோக்கம். அதன்படி முதலமைச்சர் அரசு அலுவலகங்கள் - பொது இடங்களுக்குச் செல்வது, மக்களின் குறைகளைக் கேட்டறிவது, மாவட்ட அளவிலான அதிகாரிகளைச் சந்தித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்குவது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார். மாநில அரசுக்குத் தலைவரான முதலமைச்சர், தலைமைச் செயலாளர்கள், துறைச் செயலாளர்கள், காவல் துறை உயர்நிலை அதிகாரிகள் ஆகியோருடன் கூட்டங்களில் பங்கேற்பதுதான் வழக்கம்.

அதை மாற்றி, மாவட்ட அளவிலான அதிகாரிகளைச் சந்திப்பது, களத்துக்குச் சென்று ஆய்வுசெய்வது போன்ற நடவடிக்கைகளை இன்றைய முதலமைச்சர் மேற்கொண்டுவருவது பாராட்டுக்கு உரியது. முதலமைச்சரின் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர் களத்துக்குச் செல்கிறார், நேரடியாக மக்களைச் சந்திக்கிறார் என்னும் நல்லெண்ணத்தை விதைக்கின்றன. முதலமைச்சரின் நேரடித் தலையீட்டினால் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கின்றன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்த கட்டமாக, இப்போது அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுசெய்ய இருக்கிறார்கள். தேசிய அளவில் நடைபெறும் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்று முறையான பயிற்சியைப் பெற்ற பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பதவியான ஆட்சியர் பொறுப்பை ஏற்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும். ஏற்கெனவே திங்கள்கிழமை தோறும் ஆட்சியர்களைச் சந்தித்து மக்கள் மனு கொடுக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதையும் தாண்டி, அரசு அலுவலகங்களில் ஆட்சியரின் நேரடி ஆய்வுக் கூட்டம் தேவைப்படுவது அரசு அலுவலகங்களின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தீர்வுகளில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை அரசு உணர்ந்திருப்பதைக் காண்பிக்கிறது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’, ‘களத்தில் முதல்வர்’ போன்ற திட்டங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகவும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வலுவான கருவியாகவும் பயன்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களைத் தேடிச் செல்வது, ஆய்வு என்பவை எல்லாம் மக்களின் நம்பிக்கையையும் நல்லுணர்வையும் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in