என்.சங்கரய்யா: தியாகப் பெருவாழ்வு

என்.சங்கரய்யா: தியாகப் பெருவாழ்வு
Updated on
2 min read

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர், தகைசால் தமிழர் எனப் பெருமிதங்களுக்கு உரிய என்.சங்கரய்யா, மிக இளம் வயதிலேயே பொது வாழ்வில் நுழைந்து, நாட்டுக்காகவும் உழைக்கும் வர்க்கத்துக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார்; அவரது வாழ்வும் தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கவை. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரைப் பூர்விகமாகக் கொண்ட நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியினருக்கு 1922 ஜூலை 15 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தார் சங்கரய்யா.

தந்தையின் வேலை நிமித்தமாக சங்கரய்யாவின் குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. அங்கு புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும் ஐக்கிய கிறிஸ்துவ உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்த சங்கரய்யா, 1937இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். கல்லூரியில் மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்த சங்கரய்யா, விடுதலைப் போராட்டத்திலும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திலும் தீரத்துடன் பங்கேற்றார். நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையையும் லட்சியமாகக் கொண்டு 1940இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டதால், அவர் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை.

இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகளைச் சிறையிலும் 3 ஆண்டுகளைத் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர் சங்கரய்யா. கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்த நவமணி அம்மையாரை, 1947 செப்டம்பர் 18 அன்று சாதி-மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் சங்கரய்யா. தன்னுடைய குடும்பத்தில் அனைவரும் சாதி-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ளக் காரணமாகவும் அவர் இருந்தார். 1967 தேர்தலில் மதுரை மேற்கு; 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதிகளிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா, சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து குறிப்பிடத்தக்க பல பணிகளை ஆற்றியவர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மத்திய அரசை எதிர்க்கும் மாற்றுப் பாதை, ரேஷன் விநியோகம், பொருளாதாரக் கொள்கைகள், மாநில சுயாட்சி, விவசாயம், கிராமப்புற வறுமை, நில விநியோகம், தொழிற்சாலைகள், நுழைவு வரி, மோட்டார் வாகன வரி எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் கவனப்படுத்திய பிரச்சினைகள் ஏராளம். ‘செம்மலர்’ இலக்கிய மாத இதழ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சங்கரய்யா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘தீக்கதிர்’ நாளிதழின் முதல் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டவரும் அவரே.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலுமாக அவர் நடத்திய போராட்டங்களும் பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. 2021இல் ‘தகைசால் தமிழர்’ விருதை நிறுவிய தமிழ்நாடுஅரசு, முதல் விருதை சங்கரய்யாவுக்கு அவரது நூறாவது பிறந்தநாளின்போது வழங்கிச் சிறப்பித்தது. 2000ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசிய சங்கரய்யா, வள்ளுவர் கூறியதுபோல கல்லாமை,இல்லாமை, அறியாமை, அறவே ஒழித்திட, ஏற்றத்தாழ்வைப் போக்கிட வேண்டும்என்றார். சங்கரய்யா விரும்பிய அத்தகைய நிலையைத் தமிழ்நாடு எட்டுவதற்குரியஉழைப்பைச் செலுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in