இறுதிவரை தொடரட்டும் இந்திய அணியின் வெற்றி

இறுதிவரை தொடரட்டும் இந்திய அணியின் வெற்றி
Updated on
2 min read

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வென்று, 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் மகிழ்வித்துள்ளது. 2023 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் பிற ஒன்பது அணிகளுடனும் மோதும் வகையில் லீக் சுற்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா, உலகக் கோப்பை லீக் சுற்றில் ஒரு போட்டியில்கூடத் தோல்வியடையாமல் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வென்றிருப்பது இதுவே முதல் முறை.

இந்தியா தனது முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலிய அணியை வென்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுடனான போட்டிகளில் எளிதாக வெற்றிபெற்றது. சவாலானதாக இருக்கும் என்று கருதப்பட்ட நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுடனான போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றியே கிட்டியது. தென் ஆப்ரிக்க அணியை 83 ரன்களுக்கும், இலங்கை அணியை 55 ரன்களுக்கும் இந்திய அணி ஆட்டமிழக்கச் செய்தது யாரும் எதிர்பார்த்திராத ஆச்சரியம்.

இந்திய மட்டையாளர்களில் நட்சத்திர வீரர் விராட் கோலி தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுடனான போட்டிகளில் சதம் அடித்தார். அணித் தலைவர் ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர். வேறு சில போட்டிகளிலும் இவர்கள் குறிப்பிடத்தக்க ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்து, இலங்கை உடனான போட்டிகளில் தலா ஐந்து விக்கெட்களையும் இங்கிலாந்துடனான போட்டியில் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி, அணியின் வெற்றிக்குப் பெரிதும் துணைநின்றார்.

பிற வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரும் சுழலர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்களைக் குவித்துவருகின்றனர். மட்டைவீச்சு, பந்துவீச்சு, களத் தடுப்பு என அனைத்திலும் இந்திய அணி வலுவான நிலையில் இருப்பது அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எனினும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் சில அபாரமான வெற்றிகளைக் குவித்திருப்பதை மறந்துவிட முடியாது.

நவம்பர் 15 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2015 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடமும் 2019இல் நியூசிலாந்திடமும் அரையிறுதியில் தோற்று இந்தியா வெளியேறியது. எனவே, இந்த முறை அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா கூடுதல் கவனத்துடனும் முனைப்புடனும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2013 சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு பல அணிகள் பங்கேற்கும் ஐசிசி போட்டி எதிலும் இந்திய அணி கோப்பையை வென்றதில்லை. அந்த ஏமாற்றம் தொடரக் கூடாது. இவ்வளவு வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி, இறுதிவரை சிறப்பாக விளையாடி 1983, 2011க்குப் பிறகு மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அதுவே, இந்தியாவில் வேறெந்த விளையாட்டையும்விட பன்மடங்கு அதிக முக்கியத்துவம் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படுவதற்கு முழு நியாயம் சேர்ப்பதாக அமையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in