இடைத்தேர்தல் முடிவு: சில புரிதல்கள்

இடைத்தேர்தல் முடிவு: சில புரிதல்கள்
Updated on
1 min read

றைந்த முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு கிட்டத்தட்ட தமிழக அரசியலில் கடந்த ஓராண்டாக நிலவிவந்த குழப்ப நிலை மேலும் தொடரும் என்பதன் அறிகுறியாகவே அமைந்துள்ளது. சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்குச் சொல்லப்படும் காரணம் நம்முடைய தேர்தல் ஆணையத்துக்கு தில்லுமுல்லுகளைத் தடுத்து நிறுத்த போதிய வலு இல்லை என்பதைச் சொல்வதோடு, ஓட்டுகளைப் பணத்துக்கு விற்கும் கலாச்சாரம் தமிழ்நாட்டு வாக்காளர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

தமிழகம் முழுவதுமே ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி வெளிப்படையாகத் தெரிகிறது. இருந்தும்கூட, இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சியான திமுகவால் வெல்ல முடியவில்லை. ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளால் அதிக வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக, கடைசியில் வழக்கமான தனது வாக்கு வங்கியையும்கூடப் பறிகொடுத்து, டெபாசிட் இழப்புக்கு ஆளாகியிருக்கிறது. அதிமுகவின் இருதரப்பும் போட்டி போட்டுக்கொண்டு விநியோகித்த பணம் மட்டுமே திமுகவின் தோல்விக்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதிமுக மீதான அதிருப்தி இயல்பாக தனக்கான ஆதரவாகிவிடும் என்ற திமுக தலைமையின் கணக்கு மேல் விழுந்திருக்கும் அடி இது; மக்களிடம் திமுக மேலும் நெருக்கமாகச் செல்ல வேண்டும்.

சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் டி.டி.வி.தினகரனின் வெற்றி திமுகவுக்குக் கொடுத்திருக்கும் அடியைவிடவும் அதிமுகவுக்குக் கொடுத்திருக்கும் அடி அதிகம். பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து, அரசு இயந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி, கூடவே பண பலத்தையும் இறக்கி இவ்வளவுக்குப் பின்னரும் அடைந்திருக்கும் தோல்வி அதிமுகவுக்குள் கடும் அதிர்வுகளை உண்டாக்கியிருப்பதை இப்போதே உணர முடிகிறது. பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே கட்சியில் தங்கள் அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் காட்டிவரும் ஆர்வத்தை மாநில நலனில் காட்ட வேண்டும். மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களிடம் செல்வாக்கு இல்லாவிட்டால் கட்சியிலும் செல்வாக்கு பறிபோய்விடும் என்பதை உணர வேண்டும்.

தற்போதைக்கு, தினகரன் வென்றிருக்கிறார். கட்சியின் பெயர், சின்னம்; வலுவான எதிர்க்கட்சி எல்லாவற்றையும் தாண்டி வென்றிருக்கிறார் என்றாலும், இது பணபலத்துக்குக் கிடைத்த வெற்றி என்ற விமர்சனத்தில் உண்மை இருக்குமானால், அது குறித்து அவர் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அரசியல் வெற்றி என்பது நம்முடைய பணி மக்களிடத்தில் எப்படியான தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது; களத்தை எவ்வளவு மேம்படுத்தியிருக்கிறது என்பதில் இருக்கிறது. தினகரனுடைய பேச்சும் ஊடகங்களை அவர் அணுகும் விதமும் ஒரு கூட்டத்தை அவர் பக்கம் ஈர்த்திருக்கிறது.

மக்களில் ஒரு பகுதியினர் ஆர்வத்தோடு அவரைப் பார்ப்பதை உணரவும் முடிகிறது. ஆனால், அவர் இனியாவது மக்களுக்கான அரசியலைப் பேச வேண்டும். இந்த ஓராண்டில் அதிமுக அதிகார பீடத்துக்கான போட்டியும் பூசலுமே அவருடைய அரசியலின் பேசுபொருளாக இருந்துவந்திருக்கிறது. இனியேனும் மக்கள் பிரச்சினைகளை அவர் பேச வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in