கத்தார் மரண தண்டனை: இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும்

கத்தார் மரண தண்டனை: இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும்
Updated on
2 min read

கத்தாரில் பணியாற்றிவந்த இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை ஒட்டி சர்வதேச அரசியலில் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியாவுக்கு இத்தகைய வெளியுறவு-ராஜதந்திர சோதனை எழுந்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களும் செய்த குற்றம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2022 ஆகஸ்ட் 30 அன்று அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை குறித்த முழுமையான தகவல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கும் வழங்கப்படவில்லை. எட்டு பேரும் கத்தாரில் பாதுகாப்பு சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் கத்தார் அரசின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் இதுதொடர்பாகக் கசிந்த தகவல்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இவை எதுவும் அதிகாரபூர்வமான, உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. இவர்களின் தண்டனையைத் தவிர்ப்பது அல்லது குறைப்பதற்கு இந்திய வெளியுறவு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தீவிரவாதக் குற்றச்சாட்டுகளுக்காகப் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்குக் குல்பூஷன் ஜாதவ் வழக்கை இது நினைவுபடுத்தினாலும் பாகிஸ்தான் போல் அல்லாமல் கத்தாருடனான இந்தியாவின் உறவு கடந்த பத்தாண்டுகளில் மேம்பட்டுவந்துள்ளது. இந்தியா இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவில் 40 சதவீதத்துக்கு மேல் கத்தாரிடமிருந்து வருகிறது. அதேபோல் கட்டுமானம், உணவுப் பொருள்கள் ஆகியவற்றுக்கான கச்சாப்பொருள்களை இந்தியாவிடமிருந்து கத்தார் இறக்குமதி செய்கிறது. 2017இல் வளைகுடா நாடுகள் கத்தாருடனான வணிகப் பரிமாற்றங்களுக்குத் தடை விதித்திருந்தபோதும் இந்தியாவின் ஏற்றுமதி நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தண்டனை விதிப்பின் மூலம் இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவு பாதிக்கப்படக்கூடும். அது இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. அதே நேரம் 7 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் கத்தாரில் வாழ்கிறார்கள் என்பதால் இந்தியா இந்தப் பிரச்சினையை மிகவும் நிதானத்துடனும் கவனமாகவும் கையாள வேண்டியது அவசியம். இந்த விவகாரத்துக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்பதில் கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டுக்கும் தொடர்பிருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுவதும் கவனிக்கத்தக்கது.

இந்தத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு உட்பட சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்குச் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தாண்டி இரு நாட்டு அரசுகளுக்கிடையிலான ராஜதந்திரரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கும். பிரதமரின் தலையீடுகூட தேவைப்படலாம்.

மேல் முறையீட்டில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் கருணை அடிப்படையிலான மன்னிப்பு அல்லது மரண தண்டனையைச் சிறைத் தண்டனையாக குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் இந்தியச் சிறைகளுக்கு அவர்கள் மாற்றப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே கைதிகளை மாற்றிக்கொள்வதற்கான ஒப்பந்தம் இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பதை இந்திய அரசு தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், கத்தாரில் மரண தண்டனை அளிக்கப்பட்டள்ள எட்டு இந்தியர்களையும் உயிருடன் மீட்பது இந்திய அரசின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in