அடுக்குமாடிக் குடியிருப்புகள்: மின் கட்டணத்தில் பாரபட்சம் கூடாது!

அடுக்குமாடிக் குடியிருப்புகள்: மின் கட்டணத்தில் பாரபட்சம் கூடாது!
Updated on
2 min read

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைச் சிறிது குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மட்டும் பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8-இலிருந்து ரூ.5.50ஆகக் குறைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. ஒரு தரப்பிலிருந்து வரவேற்பு எழுந்தாலும், இது பாரபட்சமான நடவடிக்கை என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

2022இல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்தூக்கிகள் போன்ற பொதுப் பயன்பாட்டுப் பணிகளுக்கான மின்கட்டணங்கள் யூனிட்டுக்கு ரூ.8ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.

தற்போது இந்தக் கட்டணக் குறைப்பு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்குச் சற்று ஆசுவாசம் அளிக்கும். அதே நேரத்தில், இன்றைய சூழலில் 6 வீடுகளைக் கொண்ட சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில்கூட மின்தூக்கிகள் இருப்பதால், இந்தக் கட்டணக் குறைப்பு அந்தக் குடியிருப்புகளுக்குப் பொருந்தாமல் போவது அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கும்.

மேலும், அரசின் இந்த நடவடிக்கை கண்துடைப்பாகக் கருதப்படவும் வாய்ப்புகள் உண்டு. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு முன்பு, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.

எனில், பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழக்கமாக நடைமுறையில் உள்ள வீடுகளுக்கான மின் கட்டணத்தை வசூலித்திருந்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை வணிகப் பயன்பாடு கட்டணம் போல் ரூ.8ஆக அதிகரித்துவிட்டு, தற்போது அதை ரூ.5.50ஆகக் குறைத்திருப்பது அதிருப்திக்கே வழிவகுக்கும்.

மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பொதுப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், மின் இறைக்கும் மோட்டார் போன்றவை அங்கு குடியிருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குமான வசதிகளுடன் சேர்ந்தவைதான். அந்த வீட்டுக்கான மின் இணைப்புக்கு ஒரு மின் கட்டண முறை அமலில் இருக்கும்போது, அதுவே பொதுப் பயன்பாடுகளுக்கும் பொருந்துவதே நியாயமாக இருக்கும். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு மீட்டர் தனியாக இருக்கும் ஒரே காரணத்தால், அதன் கட்டணம் மட்டும் மாறுபடுவது ஏற்புடையது அல்ல.

அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் இரட்டைக் கட்டண முறை என்ற விமர்சனத்துக்கும் இது வழிவகுத்துவிடும். அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ள புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெரும்பாலும் ஏற்படுத்தப்படாத நிலையில், அவற்றைத் தடையின்றிப் பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டிய நிலையில்தான் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் உள்ளனர்.

இவற்றை உணர்ந்து பொதுவாக வீடுகளுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புக்கும் வசூலிக்க அரசு முன்வர வேண்டும். இதுவே அவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in