

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபனின் படுகொலையில் தொடர்புடைய முத்துசரவணன், ‘சண்டே’ சதீஷ் ஆகிய ரவுடிகள், அக்டோபர் 12 அன்று சென்னை சோழவரம் அருகே காவல் துறையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பல்வேறு கொலை வழக்குகள், கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய இந்த இருவரின் மரணத்தின் மூலம் பிரச்சினை ஒருவழியாக முடிக்கப்பட்டுவிட்டதாகக் காவல் துறை தரப்பு கருதினாலும், சமூக விரோதி என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் சுட்டுக்கொல்லப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதமும் முக்கியமானது.
சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்திருக்கும் மூன்றாவது மோதல் கொலை இது. சோழவரம் சம்பவத்தில், தலைமறைவாக இருந்த இரு ரவுடிகளையும் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது இருவரும் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதால், இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில், செங்கல்பட்டைச் சேர்ந்த ரவுடி தணிகாசலத்தை, ஒரு வழக்கு தொடர்பாகக் கைதுசெய்து அழைத்து வந்த காவலர்கள், அவர் தப்பியோட முயன்றதால் அவரது கை, காலில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்போவதாகவும் காவல் துறை அதிகாரிகள் சூளுரைத்திருக்கிறார்கள்.
காவல் துறையினரால் ‘என்கவுன்டர்கள்’ என்று அழைக்கப்படும் மோதல் கொலைகள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவை அல்ல. இதுபோன்ற மோதல் கொலைகள் குறித்து காவல் துறை தெரிவிக்கும் தகவல்கள் ஊடகங்களில் பெரிய கேள்விகள் இன்றி வெளியிடப்படுகின்றன.
பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் என்பதால், சமூகத்திலும் பெரிய அளவில் கேள்விகள் எழாது. விசாரணையில் ஏற்படும் தாமதம், சாட்சிகளில் தெளிவின்மை போன்ற காரணங்களால் தண்டனையிலிருந்து சமூக விரோதிகள் தப்பிவிடுவதாகப் பொதுமக்கள் கருதுவதும் இதற்கு ஒரு காரணம்.
எனினும், மனித உரிமை ஆர்வலர்கள் இப்படியான மரணங்களை எதிர்க்கிறார்கள். குற்றவாளிகளுக்கும் குடும்பம் உண்டு என்பதால், நீதிமன்றங்களும் இவ்விஷயத்தில் கூருணர்வுடன் நடந்துகொள்கின்றன. மோதல் கொலைகள் நிகழும்பட்சத்தில், காவல் துறையும் மாநில அரசும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, 2014இல் உச்ச நீதிமன்றம் வழங்கியது.
மோதல் கொலைகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 176ஆவது பிரிவின்படி விசாரணை முறையாக நடைபெற வேண்டும்; மோதல் கொலையில் கொல்லப்பட்டவரின் பிரதேப் பரிசோதனையைக் காணொளியாகப் பதிவுசெய்ய வேண்டும் என நீளும் பட்டியலில், இறந்தவரின் குடும்பத்தினருக்கு எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், சோழவரம் மோதல் கொலை நிகழ்வதற்கு முன்னர், முத்துசரவணனின் பெற்றோர், தங்கள் மகன் மோதல் கொலையில் கொல்லப்படவிருப்பதாகவும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கும் காணொளி வெளியானது கவனிக்கத்தக்கது.
நீதிமன்றம் வழங்கும் மரண தண்டனையே கூடாது எனும் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், காவல் துறையினர் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, இப்படியான மோதல் கொலைகளை அரங்கேற்றுவது நிறுத்தப்பட வேண்டும். வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும் வகையில், நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கினால், இந்த அவல நிலை நிச்சயம் மாறும்!