

ம
காராஷ்டிரத்தில் பீமா - கோரேகாவில் போர் நினைவு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் மீது நடந்த தாக்குதலும் அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உருவான பதற்ற நிலையும், மிகுந்த கவலையளிக்கின்றன. மும்பை, புனே உட்பட பல நகரங்கள் முழு அடைப்புக்குள்ளாகி ஸ்தம்பித்தன. போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. கலவரச் சூழலைக் கட்டுப்படுத்தத் தவறியது அம்மாநில பாஜக அரசின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.
1818-ல் பீமா - கோரேகாவ் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் ‘மஹர்’ படைவீரர்களுடன் நடந்த சண்டையில், பேஷ்வாக்களின் பெரும் படை தோற்றது. மஹர் படையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரும் அதிக எண்ணிக்கையில் தலித்துகளும் இருந்தனர். மகாராஷ்டிர பிராமணர்கள்தான் பேஷ்வாக்கள். 1927-ல் இந்த இடத்துக்கு அம்பேத்கர் வந்திருக்கிறார். எனவே இந்த நிகழ்வை, தங்கள் வீரம் வெளிப்பட்ட நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்கள் கொண்டாடிவருகின்றனர். இது 200-வது ஆண்டு என்பதால், ஏற்பாடுகளும் பெரிய அளவில் இருந்தன.
சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி இறந்தபோது அவருக்கு மஹர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்தான் ஈமக்கிரியைகளைச் செய்தார். கடந்த டிசம்பர் மாதம் அந்த இடத்தைச் சேதப்படுத்த முயற்சி நடந்தது. அந்த இடமும் பீமா-கோரேகாவுக்கு அருகிலேயே இருக்கிறது. இந்நிலையில், காவல் துறை நிச்சயம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். தற்போது முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். யார் வன்முறையைத் தூண்டினார்கள், யார் ஈடுபட்டார்கள், இது எப்படிப் பரவியது, வலதுசாரி இந்துத்துவக் குழுக்கள் எந்த அளவுக்கு இதற்குப் பொறுப்பு என்பதெல்லாம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
தலித் மக்களும் பழங்குடி மக்களும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் அருகிவருகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாதி அடிப்படையில் தங்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சமுதாயங்களுக்கு இடையே போட்டியும் பூசலும் ஏற்படுகிறது. வன்கொடுமைச் சட்டங்களின் தீவிரத் தன்மையைக் குறைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோருகின்றனர். எனவே, தங்களுக்கென்று பரிந்து பேச யாரும் இல்லாததால் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு தலித் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த முறை தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்த வலுவாகத் திரண்டனர். அரசும் அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆதாயத்துக்காக சமுதாய ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடாமல், ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்ட வேண்டும். சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குப் பயனுள்ள திட்டங்களை அரசு அமல் செய்ய வேண்டும். இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க இந்நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்!