

கா
சநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும் என்ற மத்திய காசநோய் தடுப்புப் பிரிவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றபோதும் நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்தியா முழுவதும் காசநோயால் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெறும் மருந்து, மாத்திரைகள் தந்தால் மட்டும் போதாது, சத்துள்ள உணவும் அவசியம் என்பதால் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
காசநோயாளிகளால் வேலைக்குப் போக முடியாது என்பதால் வருவாய் வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கிறது; அதனால் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள முடியாமல், நோய் தீவிரமடைகிறது. ஊட்டச்சத்துக் குறைவுக்கும் காசநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உடலில் சத்துகள் நீங்கி உடல் பலவீனமடையும்போது காசநோயின் தீவிரம் அதிகமாகிவிடுகிறது. காசநோய் வந்தாலே நோயாளிகளுக்கு பசி குறைந்துவிடும். எனவே, சாப்பிடும் அளவும் கொஞ்சமாகத்தான் இருக்கும். இப்படி காசநோயே காரணமாகவும் விளைவாகவும் மாறி அவர்களைத் துன்புறுத்தும்.
இந்தியாவில் காசநோய்க்கு ஆளானவர்களில் சரிபாதிப் பேர் சத்துள்ள உணவு கிடைக்காததால்தான் அந்நோயின் கொடும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதை எப்படிச் சரி செய்வது என்பதுதான் அரசின் முன் உள்ள முக்கியமான கேள்வி. சிறுதானிய உணவுகள், வைட்டமின் ஏ அடங்கியுள்ள உணவுவகைகள், துத்தநாகம் அடங்கிய நுண் ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைக் கொடுத்து மிகச் சிறிய வட்டங்களில் ஆய்வு செய்தபோது, சத்துணவு கிடைத்தால் நோய் கட்டுப்படுவதுடன் குணமாவதும் தெரிந்துள்ளது. எனினும், ஆய்வுகள் மூலம் போதிய தரவுகள் கிடைக்கவில்லை என்று காரணம் காட்டி அரசு செயல்படாமல் இருந்துவிட முடியாது.
இது தொடர்பாக அரசுக்குச் சில யோசனைகளைப் பரிந்துரைத்துள்ளது மத்திய காசநோய் பிரிவு. அதில் ஒன்று காசநோய் பாதித்தவர் இருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை இரு மடங்கு அளிக்க வேண்டும் என்பதாகும். காசநோயாளியிடமிருந்து அவருடைய குடும்பத்தாருக்கும் நோய் தொற்றக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே குடும்பத்தாரும் நல்ல உணவை உண்டு வலிமையுடன் இருந்தால்தான் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். இது எதிர்காலத்தில் மேலும் காசநோயாளிகள் உருவாவதைத் தடுக்க உதவும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.500 ரொக்கமாகத் தருவதால் அதிகப் பயன் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதைப் பயனுள்ள வகையில் எப்படிச் செலவிட வேண்டும் என்று காசநோயாளியின் குடும்பத்தாருக்கு விளக்குவது அரசின் கடமை. காசநோய் வருவதன் காரணம் என்ன, அது வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வந்தபின் செய்ய வேண்டியவை என்ன, உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதைவிட மிக மிக அவசியம்!