அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: நியாயமான தீர்வு வேண்டும்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: நியாயமான தீர்வு வேண்டும்
Updated on
2 min read

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருப்பது கவலை அளிக்கிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், மூன்று சங்கங்களைச் சேர்ந்தோர் ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். 2009 ஜூன் 1 முதல் பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள், அதற்கு முந்தைய தேதிவரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைவிட அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவாகப் பெறுகின்றனர்.

இதை எதிர்த்து, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு வாரத்துக்கும் மேலாக டிபிஐ வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, பகுதிநேர ஆசிரியர் சங்கம் சார்பில் வளாகத்தின் இன்னொரு பகுதியில், செப்டம்பர் 25 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல், 2013 முதல் டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அதற்குரிய அரசுப் பணி நியமனம் கோரிப் போராடிவருகின்றனர். இவர்கள் இன்னொரு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று 2019இல் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களில் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. போராடும் ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நடத்திய ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

அரசின் நிதிநிலையைக் கருத்தில்கொண்டு, அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட, போராடிவரும் மூன்று சங்கத்தினரும் மறுத்துவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 4 அன்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து டிபிஐ வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. திமுக அரசு ஆட்சிக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நிதி நிலையைக் காரணம் காட்டி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒத்திப்போடுவதும் ஜனநாயக வழியில் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம்போல் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதும் அவசியம். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் கல்விக்கான முதலீடாகவே அரசு பார்க்க வேண்டும். விரைவில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைப் பரிசீலிக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். பிற இரண்டு சங்கத்தினரும் போராட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்வது மாணவர்களுக்கும் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் நல்லதல்ல. எனவே, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை உடனடியாக எட்ட வேண்டியது அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in