வள்ளலார்: நித்தியப் பெருஞ்ஜோதி!

வள்ளலார்: நித்தியப் பெருஞ்ஜோதி!
Updated on
1 min read

மடமை இருளைப் பொசுக்கும் ஜோதியாக, 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் சி.இராமலிங்கனார். மூடநம்பிக்கை களையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் தகர்த்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டை மக்களிடம் கொண்டுசென்ற மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

‘சமய உலகில் நுழைந்து சமய நெறியிலே நடந்து சமய உலகைக் கடந்தவர் வள்ளலார்,’ என வள்ளலாரை அறிமுகப்படுத்துகிறார் ஆய்வாளர் ப.சரவணன். சாதிகளையும் சமயங்களையும் மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் வள்ளலார் கடந்து நின்றார். துறவுக்குரிய துவராடை தவிர்த்து வெள்ளாடை தரித்தார். அரை நூற்றாண்டு (1823-1874) காலமே வாழ்ந்த அவர், அதில் பெரும்பகுதியைச் சென்னையில் (1825 முதல் 1858 வரை) கழித்தார். இலக்கணமறிந்த தமிழ் வித்துவான், சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர் என ‘தருமமிகு சென்னை’யில் வள்ளலார் பல பரிமாணங்களில் வெளிப்பட்டார்.

வடலூரில், 1865இல் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்க’த்தையும், 1867இல் ‘சத்திய தரும சாலை’யையும் நிறுவினார். ‘பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ எனப் பசிப்பிணி கண்டு வெதும்பிய வள்ளலார், சத்திய தரும சாலையில் மூட்டிய நெருப்பு இன்றுவரை அணையாமல் பசிப்பிணி போக்கிவருகிறது. வயிற்றுப் பசியைப் போக்குவதற்குத் தருமசாலையைக் கட்டியதுபோல், அறிவுப் பசியைப் போக்குவதற்கு ‘சமரச வேத பாடசாலை’, ‘சன்மார்க்க போதினி’ என இரண்டு கல்விக்கூடங்களை வள்ளலார் நிறுவினார்.

ஒன்பது வயதில் பாடத் தொடங்கிய வள்ளலார், 51 வயதில் சித்தி அடையும்வரை பாடுவதை நிறுத்தவில்லை; பக்தியில் தொடங்கி உயிர் இரக்கத்திலும் சீர்திருத்தத்திலும் நிறைவடையும் இந்தப் பாடல்கள் ‘திருவருட்பா’ என வழங்கப்படுகின்றன. 5,818 பாடல்களைக் கொண்ட இத்தொகுப்பு, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிலும் தலையாயது ஜீவகாருண்ய ஒழுக்கமே என்பதை வலியுறுத்தி அவர் எழுதிய உரைநடை நூல், ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’.

சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடி வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தங்கள் அவருக்குக் கடும் எதிர்ப்புகளைக் கொண்டுவந்தன. உண்மை அன்பால் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ‘அருட்பெருஞ்ஜோதி’ வழிபாட்டை முன்வைத்த வள்ளலார், வடலூர் மக்கள் தருமசாலைக்காகக் கொடுத்த நிலத்தில் தருமசாலையை ஒட்டி, ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’யை 1872இல் நிறுவி ஒளி வழிபாட்டினைத் தொடங்கிவைத்தார்.

இந்திய அரசு 2007இல் வள்ளலாருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது; வள்ளலாரின் 200ஆம் ஆண்டினை ஒட்டி, அவரது பிறந்த நாளான அக்டோபர் 5, இனி ‘தனிப்பெருங்கருணை நாள்’-ஆகக் கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் அறிவித்தார்.

‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’ என முழங்கிய வள்ளலார், தமிழ்ச் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரும்பங்காற்றியவர். வள்ளலார் சாடிய சமூகப் பிணிகள் இன்னும் முழுமையாகக்களையப்படவில்லை. எனவே, தமிழ்ச் சமூகம் அவரை இன்னும் கெட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in