டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: உடனடித் தீவிரம் தேவை!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: உடனடித் தீவிரம் தேவை!
Updated on
2 min read

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அய்யனார்-சோனியா தம்பதியினரின் குழந்தையான ரக்‌ஷன் (4 வயது), டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பது வேதனையைத் தருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்குப் பரிசோதனை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 4,000 பேரில், 253 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்; ரக்‌ஷன் உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு 4,486 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் அந்த ஆண்டு டெங்குவுக்குப் பலியாகினர். 2019இல் 8,527 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் பலியாகினர். 2020இல் 2,410 பேர் என்கிற அளவில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், 2021இல் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,039க்கு உயர்ந்தது; பலியானவர்கள் 8 பேர். 2022இல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிடச் சற்று அதிகரித்து 6,430ஐத் தொட்டது; 8 பேர் பலியாகினர்.

கொசுக்களால் பரவக்கூடிய நோய் டெங்கு. இதற்குக் காரணமான ஏடீஸ் கொசு இனம் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படக்கூடியது. வீடுகளிலும் பிற இடங்களிலும் தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரில் இவை உற்பத்தியாகின்றன. மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குவதும் பல்வேறு நோய்களுக்கு வித்திடக்கூடும். இதனால் டெங்கு, பிற மழைக்கால நோய்களின் பரவல் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெங்கு பரவலால் தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், டெங்கு-தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் செப்டம்பர் 12 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2,972 அரசு, தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் ஏற்பட்டவர்களின் அறிக்கை பெறப்பட்டு கிராம, நகர வாரியாகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அன்றைக்கே அனுப்பப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கிராமம்-நகர்ப்புறங்களில் 21,307 தினசரி தற்காலிகப் பணியாளர்கள் கொசுப்புழுத் தடுப்புப் பணிகளை அன்றாடம் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகத்திலும் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமாக இருக்கிறது; பெங்களூருவில் 4,000 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 7,000 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்; கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் நிலவும் இந்தச் சூழல்களை டெங்கு-நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பேரிடர்களின்போதும் நோய்க் காலங்களிலும் அரசு என்னதான் குறிப்பிடத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இடர்பாடுகளிலிருந்து மீண்டுவருவதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. வடகிழக்குப் பருவமழை சமீபித்திருக்கும் நேரத்தில், டெங்கு காய்ச்சலின் பரவல் முன்னதாகவே தீவிரமடைந்திருப்பதால், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டியது மக்களின் கடமையாகும். டெங்கு பாதிப்பால் இன்னொரு உயிர் பலியாகாமல் தடுப்பது அனைவருக்குமான பொறுப்பு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in