மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?

மகளிரைப் பாதுகாக்கத் தவறுகிறோமா?
Updated on
2 min read

தே

சிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டிருக்கும் தரவுகள் மக்களுடைய பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தத் தவறுகிறதோ எனும் கேள்வியை எழுப்பியிருக்கின்றன. 2016-ல் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது இந்தத் தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. 2015-உடன் ஒப்பிடுகையில் பாலியல் வல்லுறவு, கடத்தல், தாக்குதல் போன்ற மகளிர் மீதான குற்றங்கள் 2.9% அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகம். டெல்லி, மும்பை இதில் முன்னிலை வகிக்கின்றன. மகளிருக்கு எதிரான குற்றச்செயல் எண்ணிக்கையில் தேசிய சராசரியைப் போல இரண்டு மடங்கு குற்றங்கள் டெல்லியில் நடந்துள்ளன. பெரும்பாலும் பெண்களின் கணவர் அல்லது நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதுதான் பெரும் துயரம்.

2012-ல் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, ‘மிகக் கொடூரமான கொலை’ என்பதற்கான விளக்கங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இதுபோன்ற குற்றங்களைக் காவல் துறையினர் உடனுக்குடன் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனையளிக்கிறது.

கொலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தேசிய அளவில் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 2.7 என்று 1950-களில் இருந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1992-ல் ஒரு லட்சத்துக்கு 4.62 என்று மிக அதிகமாக இருந்தது நினைவுகூரத்தக்கது. தேசிய அளவில் கொலைகளின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும் 2016-ல் உத்தர பிரதேசத்தில் 4,889 பேரும் பிஹாரில் 2,581 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கேரளத்தில் 305 கொலைகள் நடந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணிக்கை 2015-ஐ விட அதிகம் என்பது மற்றொரு அதிர்ச்சி. அனைவருக்கும் கல்வி, தொழில் செய்வதற்கான திறன்களைக் கற்றுத்தருதல் ஆகியவற்றின் மூலம் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைக்க முடியும். குற்றங்களைப் பதிவு செய்வது, விசாரிப்பது, தடயங்களைச் சேகரிப்பது போன்றவற்றில் புதிய முறைகளைக் கையாள வேண்டும். புதிய சூழல்களுக்கேற்பச் செயல்படவும், மனித உரிமைகளை மதிக்கவும் காவல்துறையினரைப் பயிற்சியளிக்கவும் அதிக முயற்சிகளை அரசுகள் எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, காவல் துறையினரின் பணிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

கல்வி, சுகாதாரச் சூழலை மேம்படுத்துவது பலன் தரும். காவல் துறையினரின் பணிகளை மூத்த அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படையாகவும், சமூகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலும் அமைய வேண்டும். இதனால் குற்றவியல் வழக்குகளில் நீதி வழங்குதல் மேம்படும்.

வழக்கமான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு தவிர சிறிய அளவிலானவை என்று கருதப்படும் குற்றச்செயல்களும் பதிவாக வேண்டும். குற்ற எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பைவிட, குற்றங்களே நடைபெறாமல் தடுப்பதுதான் மிக மிக முக்கியம். அரசும் காவல் துறையும் உணர வேண்டிய தருணம் இது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in