அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் அரசியலும்!

அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் அரசியலும்!
Updated on
1 min read

லைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது, அந்த வழக்கைத் தாண்டிய முக்கியத்துவத்தைப் பெறுவதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

இந்திய வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய அளவிலான ஊழல் என்று பேசப்பட்ட விவகாரம் இது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2008-ல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடானது, அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டது என்று அன்றைய தலைமைக் கணக்காயர் வினோத் ராய் கூறினார். அவர் உத்தேசமாகத் தெரிவித்த இந்தத் தொகையானது பெரும் அதிர்வுகளை உண்டாக்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்கும் வழிவகுத்தது. “இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானது” என்று கூறிய உச்ச நீதிமன்றம், அப்போது 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்தும்செய்தது. தலைமைக் கணக்காயரின் மதிப்பீடானது மிகைப்படுத்தப்பட்டது என்று அப்போதிருந்தே பலரும் வாதிட்டுவந்தாலும், அரசியல் தளத்தில் அவர் குறிப்பிட்ட இழப்புத் தொகையானது ஊழல் தொகையாகத் திரிக்கப்பட்டு, காங்கிரஸ் - திமுக இரு கட்சிகளுக்கும் எதிரான, வலுவான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. விளைவாக, இரு கட்சிகளுமே பெரும் தோல்விகளை விலையாகக் கொடுத்தன. பெரிய களங்கத்தையும் சுமந்தன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது காங்கிரஸ் - திமுக இரு கட்சிகளுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.

இந்த வழக்குக்கு வெளியே எழும் கேள்விகளில் முக்கியமானது, ‘இப்படியான மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டை எப்படித் தலைமைக் கணக்காயர் தெரிவித்தார்; என்ன விதமான நம்பகத்தன்மையை நம்முடைய தலைமைக் கணக்காயர் அலுவலகம் கொண்டிருக்கிறது?’ என்பதாகும். அடுத்ததாக, விசாரணை அமைப்புகள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. ஏனென்றால், ‘பொதுக் கண்ணோட்டமும், கணக்குத் தணிக்கை அறிக்கைகளும் குற்றவியல் விசாரணைகளுக்கு அடிப்படையாக இருக்க முடியாது. விசாரணை அமைப்புகள் வழக்கு தொடுப்பதற்கு முன்னர், தங்களிடம் இருக்கும் தரவுகளை முழுமையாக அலசி ஆராய வேண்டும்’ என்பது இந்தத் தீர்ப்பின் வழியே தெள்ளத் தெளிவாக உணர்த்தப்படுகிறது. மிகையான மதிப்பீடு என்பது ஒருபுறம் இருக்க வழக்கை நடத்துவதில் விசாரணை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து நீதிபதி தெரிவித்திருக்கும் கருத்துகள் சிபிஐ மீதான பிம்பத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. முறைகேடு நடந்ததா, இல்லையா என்ற கேள்விக்கும் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டு கணக்காயர் தெரிவித்த மதிப்பீட்டை எவ்விதக் கேள்விக்கும் உள்ளாக்காமல் ஊதிப் பெருக்கி, பெரும் அழுத்தத்தைச் சமூகத்தில் உண்டாக்கிய வகையில், ஊடகங்களும் மக்கள் முன் கை கட்டி நிற்க வேண்டிய சூழலை இந்த வழக்கு உண்டாக்கியிருக்கிறது. மொத்தத்தில் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் சுயஆய்வு செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தன்னுடைய தீர்ப்பிலிருந்து உருவாக்கியிருக்கிறார் நீதிபதி ஷைனி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in