

பா
கிஸ்தானில், சட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரி தெஹ்ரீக்-இ-லபாய்க் யா ரசூல் அல்லாஹ் (டி.எல்.ஒய்.) நடத்திய போராட்டத்துக்கு அரசு பணிந்திருப்பது மத அமைப்புகளைக் கையாள்வதில் அந்நாடு எத்தனை பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஆட்சியாளர்கள் பதவியேற்கும்போது இறைத் தூதரின் பெயரைக் குறிப்பிட்டு உறுதியேற்பதில் திருத்தங்கள் கொண்டுவந்த சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீது பதவி விலக வேண்டும் என்ற காதிம் ஹுசைன் ரிஸ்வி தலைமையிலான டி.எல்.ஒய். அமைப்பு தலைமையில் இஸ்லாமிய அமைப்புகள் ராவல்பிண்டியில் தொடர்ந்து மூன்று வாரங்களாகச் சாலை மறியலில் ஈடுபட்டன. சட்ட அமைச்சரின் இந்தச் செயல்பாடு சமய நிந்தனைக்குச் சமமானது என்று அந்த அமைப்புகள் குற்றம்சாட்டின.
இவ்விவகாரத்தில் எப்படித் தீர்வு காண்பது என்று பிரதமர் ஷாஹித் காகன் அப்பாஸிக்குப் புரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, அந்த சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்றார் பிரதமர். அதன் மூலம் அந்த அமைப்புகளைச் சமாதானம் செய்ய முடியும் என்று அவர் கருதினார். ராவல்பிண்டி - இஸ்லாமாபாத் இடையிலான சாலையைப் போராட்டக்காரர்கள் மறித்தபோது, முதலில் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டம் நீடித்ததைத் தொடர்ந்தே போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முன்வந்தனர்.
பேச்சுவார்த்தை பலனளிக்காததால், பிரச்சினை தீவிரமடைந்தது. இவ்விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்று நீதிமன்றம் விமர்சித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ராணுவத்தின் துணையையும் அரசு நாட வேண்டிவந்தது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீது ராஜிநாமா செய்த பிறகுதான், போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் காதிம் ஹுசைன் ரிஸ்வி.
இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் அரசு கையாண்ட விதம், பேச்சுவார்த்தை நடத்த ராணுவத்தை நாடியது போன்றவை அரசின் செயலதிகாரம் எந்த அளவுக்குப் பலவீனப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதியிழப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவப்பெயரைச் சந்தித்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைமையிலான ஆட்சி, அதிலிருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. பிரதமர் அப்பாஸியின் அணுகுமுறை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
இந்தப் பிரச்சினையை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவந்த ராணுவத்தின் தலையீடு, பாகிஸ்தானின் ஜனநாயக அரசு எந்த அளவுக்குத் தெளிவில்லாமல் செயல்படுகிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. தீவிரப் போக்கு கொண்ட அமைப்புகள் அரசை மிரட்டிப் பணியவைக்க முடியும் என்பது எந்தவொரு நாட்டுக்கும் கவலை தரும் விஷயம். போராட்டத்தில் ஈடுபட்ட டி.எல்.ஒய். அமைப்புக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், இத்தனை பேர் திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது, மத அடிப்படையிலான பிரச்சினை அரசை ஸ்தம்பிக்கச் செய்தது போன்றவை எந்த ஒரு அரசும் பாடம் கற்க வேண்டிய விஷயங்கள் !