தலைநகருக்கும் வேண்டும் கூட்டாட்சி!

தலைநகருக்கும் வேண்டும் கூட்டாட்சி!
Updated on
2 min read

டெல்லி சேவைகள் திருத்த மசோதா 2023, நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் தொடர்பான நிர்வாகச் சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு கடந்த மே மாதம் அளித்திருந்த உத்தரவுக்கு மாறாக, இந்த மசோதா பாஜக அரசால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டும்விட்டது.

டெல்லியில் 2015இல் ஆட்சிக்கு வந்தது முதலே அதிகாரிகள் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று கூறிவந்தது ஆம் ஆத்மி கட்சியின் அரசு. நிர்வாகச் சேவைகளில் யாருக்கு அதிகாரம் என்பதில் துணைநிலை ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில்தான் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமே அதிகாரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் மத்திய அரசு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது.

இதன்மூலம் அதிகாரிகள் நியமனம், மாற்றம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்குக் கிடைத்தது. ஆனால், தீர்ப்பு வெளியான ஒரு வாரத்துக்குள்ளாக டெல்லியில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிறகு அவசரச் சட்டத்துக்கு மாற்றாக டெல்லி நிர்வாகத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதன்படி டெல்லி அரசில் உயரதிகாரிகள் நியமனம்-இடமாற்றம் தொடர்பாகச் சிபாரிசு செய்ய ஓர் ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக ஒரு விதிகூடச் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தபோதே அதை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. தற்போது டெல்லி சேவைகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இச்சட்டம் அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறதா என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு விவாதிக்க இருக்கிறது. ஆனால், அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடே கேள்விக்குரியது என்று மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகோய் நாடாளுமன்ற விவாதத்தில் பேசியிருக்கிறார்.

அதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதியின் கருத்து நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. டெல்லி சேவைகள் திருத்த மசோதா தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு விசாரித்து வழங்கும் தீர்ப்பை மத்திய அரசும் டெல்லி அரசும் ஏற்றுச் செயல்படுவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது. கூட்டாட்சி என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, இரு தரப்பும் செயல்படுவது டெல்லி மக்களுக்கும் நலம் பயக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in