

சி
ல திரைப்படங்கள், புத்தகங்களில் ஆட்சேபத்துக்குரிய அம்சங்கள் இருக்கின்றன என்று அவ்வப்போது எதிர்ப்புக் குரல்கள் எழுவது வழக்கம்தான். ஒரு கலை வடிவத்தை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கலின் வெளிப்பாடாக இதைப் பார்த்துவருகிறோம். எனினும், பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன், ரண்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பத்மாவதி’ படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்புக் குரல்களும், படத்துடன் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு விடப்பட்டிருக்கும் மிரட்டல்களும் மிகுந்த கவலையளிக்கின்றன.
ராஜஸ்தானின் சித்தூர் கோட்டையின் ராணியாக இருந்தவர் என்று கருதப்படும் பத்மாவதி பற்றிய கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் இது. உண்மையில், பத்மாவதி என்ற பெண் வாழ்ந்ததற்கு வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதும் கிடையாது. 16-வது நூற்றாண்டில் சூஃபி கவிதைகளில் ‘பத்மாவத்’ என்ற பாத்திரம் மிகவும் பிரபலமானது. அது கற்பனையானது. அதில் வரும் பெண் பாத்திரத்தின் நல்லியல்புகள் திரும்பத் திரும்பப் பல்வேறு வடிவங்களில் நாட்டுப்புறக் கலைகள் மூலம் கூறப்பட்டு ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. பத்மாவதியின் அழகு குறித்துக் கேள்விப்பட்டு, டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படையெடுத்து வந்ததாகவும் பத்மாவதியைக் கண்டதாகவும் உள்ள கதையையொட்டி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராஜபுத்திரர்களின் ‘கர்ணிசேனை’ என்ற அமைப்பு போராட்டம் நடத்திவருகிறது. தீபிகா படுகோன் போன்றோரின் தலைகளுக்கு விலை வைத்து கொலை மிரட்டல்கள்கூட விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சிலர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கியது, இந்தியத் திரையுலகினரை அதிரவைத்தது.
தற்போது, படத்தை வெளியிட திட்டமிட்ட நிலையில், எதிர்ப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. படத்துக்கு எதிராக பாஜக தலைவர்களும் மிரட்டல்களை விடுக்கிறார்கள். மறுபக்கம், ‘உண்மைகளைத் திரித்தும், மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் திரைப்படத் தணிக்கை வாரியத்தை உரிய வகையில் எச்சரிக்க வேண்டும்’ என்று பாஜக தலைமையிலான உத்தர பிரதேச மாநில அரசு கடிதமே எழுதியிருப்பது உச்சகட்ட கொடுமை!
சமீபத்தில், படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘படத்தில் உள்ள காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே, சிலவற்றை நீக்க வேண்டும் என படம் வெளியாகும் முன்பே கோருவது ஏற்புடையதல்ல’ என்று கூறி தள்ளுபடி செய்திருக்கிறது. 1989-ல் ‘எஸ்.ரங்கராஜன் எதிர் ஜகஜீவன் ராம்’ வழக்கு விசாரணையின்போது, ‘பொது ஒழுங்கு குலைந்துவிடும் என்று மிரட்டுகிறார்கள் என்பதற்காக கருத்துச் சுதந்திரத்துக்குத் தடை விதிக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தைக் காரணமாக வைத்து சகிப்பின்மையை வெளிப்படுத்த முடிவதும், அதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும் பொது வெளியிலும் கூட ஆதரவு கிடைப்பதும் கவலையளிக்கும் விஷயங்கள். கருத்துச் சுதந்திரத்துக்கான ஆபத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்பதைத்தான் இவை காட்டுகின்றன. ஜனநாயகச் சூழலுக்கு இது நல்லது அல்ல!