

இ
ந்தியாவில் புதிதாகக் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கையும், காசநோயால் ஏற்படும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையும் 2015-ஐ விட 2016-ல் சற்றே குறைந்திருக்கிறது என்று, உலக அளவில் காசநோய் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது. 2015-ல் 28.4 லட்சமாக இருந்த புதிய காசநோயாளிகளின் எண்ணிக்கை, 2016-ல் 27.9 லட்சமாகக் குறைந்திருக்கிறது 2015-ல் 5.1 லட்சமாக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2016-ல் 4.3 லட்சமாகக் குறைந்திருக்கிறது. காசநோய் பாதிப்புகள் தொடர்பாக தேசிய அளவிலான கணக்கீட்டின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருப்பதால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிக்கையைத் தற்காலிகத் தரவாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த இலக்கை அடைய, உலக அளவில் புதிய இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி, காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை யும் இறப்புவிகிதமும் குறைந்துவருகின்றன. உலக அளவில் காசநோய் பாதிப்பை 20% குறைப்பதும், இறப்புவிகிதத்தை 35% குறைப்பதும் ‘காசநோய்க்கு முடிவு’ எனும் திட்டத்தின் இலக்குகள். இதற்கு அடிப்படை ஆண்டாக 2015-ஐத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உலக அளவிலான காசநோய் பாதிப்புகளில் 23%, காசநோய் மரணங்களில் 26% இந்தியாவில் நிகழ்பவை என்பதால், காசநோயை ஒழிப்பதில் இந்தியா எடுக்கும் நடவடிக்கை கள் மிக முக்கியமானவை.
காசநோயால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளி பற்றிய தகவல்களையும் முறையாகப் பதிவுசெய்து, அவற்றைத் தேசியக் கண்காணிப்பு அமைப்புக்கும் பின்னர் உலக சுகாதார நிறுவனத்துக்கும் அனுப்புவது போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகள்தான் காசநோய் ஒழிப்புக்கான முதல் படி. 2013 முதல் 2015 வரை தனியார் மருத்துவ நிறுவனங்கள் இப்படியான பதிவுகளைப் பராமரிப்பது 34% அதிகரித்தது
2015-ல் இந்த விகிதம் 61% ஆகவும், 2016-ல் 69% ஆகவும் உயர்ந்தது. ஆனால், 2016-ல் பொதுத் துறை மற்றும் தனியார் துறை மருத்துவ நிறுவனங்கள் 19 லட்சம் காசநோயாளிகள் தொடர்பான தகவல்களைத்தான் பதிவு செய்திருக்கின்றன. காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அசல் எண்ணிக்கைக்கும், பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக் கும் இடையில் 25% இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
இது உலக அளவில் பெரிய வேறுபாடு ஆகும். காசநோயைக் குணப்படுத்துகிற ‘ரிஃபாம்பிசின்’ மருந்துக்கு, பாக்டீரியாக்கள் கட்டுப்படாத தன்மை என்பது 2015-ஐக் காட்டிலும் 2016-ல் இரு மடங்காகியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல், பல்வேறு மருந்துகளுக்குக் கட்டுப்படாத பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 84,000 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களுக்கும், புதிதாகக் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் வீட்டில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பு மருந்துகள் கொடுக்கும் முறை தற்போது முயற்சிசெய்து பார்க்கப்படுகிறது. காசநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகச் சேகரிக்கப்படும் நிதியில் 74% இந்தியாவிலிருந்தே பெறப்படுகிறது.
சர்வதேச நாடுகளிலிருந்து பெறப்படுவது 26%தான். 2025-க்குள் காசநோய்க்கு முடிவுகட்டும் இந்தியாவின் இலக்கை அடைய, போதுமான நிதியும் உறுதியான நடவடிக்கைகளும் அவசியம்!