Published : 28 Nov 2017 10:11 AM
Last Updated : 28 Nov 2017 10:11 AM

உயர் நீதிமன்றத்தில் எப்போது ஒலிக்கும் தமிழ்?

நீதிமன்றங்களில் வழக்காடுதலிலும், தீர்ப்பளிப்பதிலும் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் பொதுத்தளத்தில் விவாதத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. சில மாதங்களுக்கு முன் மாநில சுயாட்சியை முன்னிறுத்தி மாநாடு நடத்திய அக்கட்சி, அதன் தொடர்ச்சிபோல இப்போது ‘உயர் நீதிமன்றங்களில் தாய்மொழிக்கான மாநாடு’ நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அன்றாட அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி, தேசிய இனங்களுக்கான பிரதிநிதித்துவம், மாநிலங்களுக் கான அதிகாரம், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் போன்ற காத்திரமான விஷயங்களைச் சாமானிய மக்களின் உரையாடலில் கொண்டுசெல்வதில் அண்ணாவின் பாதையை விசிகவின் தலைவர் திருமாவளவன் தேர்ந்தெடுத்திருப்பதுபோலத் தெரிகிறது. இந்தியாவின் தலித் இயக்க அரசியல் போக்கில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க நகர்வுகள் இவை.

இந்தியை ஆட்சிமொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்தி மொழியுரிமையை வென்றெடுத்த முன்னோடி மாநிலம் தமிழகம். சட்டம் இயற்றும் அவையிலும் நிர்வாகத் துறையிலும் தமிழை மாநில ஆட்சிமொழியாக நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டாலும்கூட நீதிமன்றத்தில் தமிழ் ஆள முடியாத நிலைதான் யதார்த்தத்தில் நீடிக்கிறது. தமிழ்நாட்டின் ஆட்சி அலுவல் மொழிச் சட்டத்தில் 1976-ல் திருத்தங்கள் கொண்டுவந்து, அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையை எடுத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை யும் கூடுதல் ஆட்சிமொழியாக ஆக்குவதற்கான நடவடிக்கையை 2006-ல் முன்னெடுத்தார். என்றாலும், இந்த இரு நடவடிக்கை களையுமே தொடர்ந்துவந்த அதிமுக அரசு, போதிய அக்கறை காட்டாததால் இலக்கை அடையாத நிலையிலேயே நீடிக்கிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் கூடுதல் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் மாநில ஆளுநர் முன் அனுமதி பெற்று, அம்மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தி அல்லது மற்ற மொழிகளைப் பயன்படுத்த உத்தரவிடலாம் என அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது. தமிழகம், குஜராத், சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களும் தங்களது மாநில மொழிகளை உயர் நீதிமன்றத்தில் தொடர்புமொழியாக வகைசெய்ய வேண்டும் என்று ஆளுநர் வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிக்குக் கொடுக்க வேண்டிய பிரதிநிதித்துவம் மாநிலங்களின் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல; நீதிமன்றத்தை அணுகும் சாமானிய மக்களின், ஏழை எளியோரின் புரிதலோடு சம்பந்தப்பட்ட விஷயம். நீதித் துறையில் கீழ்நிலைச் சமூகங்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதோடு சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு முதல்வராக, குஜராத்திக்காக மோடி வலியுறுத்திய விவகாரம் இது. இன்று பிரதமராகி, முழுப் பெரும்பான்மையுடன் இருக்கும் சூழலில் அவரே முன்னின்று நடவடிக்கை எடுக்க எது தடையாக இருக்கிறது?

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் வாதிடவும், தீர்ப்பு மற்றும் உத்தரவுகளை வெளியிடவும் அனுமதிக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x