

கோ
வையில் முதல்வர் வருகைக்காகச் சாலைக்கு நடுவே அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற அமெரிக்க வாழ் பொறியாளர் ரகுபதி உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது. அதைக் காட்டிலும் வேதனையைத் தருவது இதுகுறித்து ஆளும் கட்சித் தரப்பிலிருந்து முறையான விளக்கமோ, வருத்தமோ தெரிவிக்கப்படாத நிலையில் விபத்துக்கு அந்த அலங்கார வளைவு காரணமல்ல என்று நிறுவ அரசுத் தரப்பு முயல்வது. கடுமையான கண்டனத்துக்குரியது இது!
கோவை அவினாசி சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் சென்ற ரகுபதி, அலங்கார வளைவில் நீட்டிக்கொண்டிருந்த மூங்கிலில் எதிர்பாராதவிதமாக மோதிக் கீழே விழுந்திருக்கிறார். அப்போது சாலையில் வந்த லாரி, ரகுபதி மீது ஏறியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரைப் பறிக்கப் பிரதானமான காரணமாகக் கூறப்படும் அலங்கார வளைவு விஷயத்தை மூடி மறைத்துவிட்டு, லாரி மீது முழுப் பழியையும் போடும் காவல் துறையினரின் நடவடிக்கை தவறுக்குத் துணைபோகும் செயல். இது தவிர, ரகுவின் மரணத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சாலையில் ‘ரகுவைக் கொன்றது யார்?’ என்று எழுதிய இளைஞர்களைக் குறிவைத்தும் காவல் துறை இயங்குவதாக வெளிவரும் தகவல்கள் அடக்குமுறையைத்தான் உணர்த்துகின்றன. போராட்டங்களில் ஈடுபடுவோர், ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்புவோரை ஒடுக்கும் விதமாக நடந்துகொள்வதைத் தமிழகக் காவல் துறை ஒரு கலாச்சாரமாக வளர்த்தெடுக்கிறதோ என்று தோன்றுகிறது.
முறையான அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலைகளில் பதாகைகள் வைக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, சமூகச் செயல்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி 2011-ல் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக நீதிமன்றம் சட்டவிரோத விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. அது முறைப்படி பின்பற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ராமசாமி. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சூழலில், பதாகைகள், அலங்கார வளைவுகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும் காவல் துறையும் நேர் எதிராக நடந்துகொள்வது தமிழகத்தில் நிலவும் மோசமான நிர்வாகச் சூழலையே வெளிப்படுத்துகிறது. தனது திருமணம் குறித்து ஏற்பாடு செய்வ தற்காக வந்த ஒரு இளைஞரின் உயிர் போயிருக்கிறது. அவரு டைய கனவுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. என்ன சொல்லியும், செய்தும் ஈடுசெய்ய முடியாதது ஓர் உயிர் என்ற கரிசனம் வேண் டாமா? இவை யாவும் முதல்வர் பழனிசாமியின் பெயருக்கே இழுக்கை உண்டாக்கும். இதை அவர் உணர்ந்திருக்கிறாரா?
ஆறுதலூட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி இனி இத்தகைய கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர். அவருடைய கட்சியினர் மட்டும் அல்லாமல், ஏனைய கட்சியினரும் இதைப் பின்பற்ற முயல வேண்டும். ரகுபதியின் மரணம் நம்முடைய மனசாட்சியை உலுக்க வேண்டும்!