ஹரியாணா கலவரம் உணர்த்தும் பாடம்

ஹரியாணா கலவரம் உணர்த்தும் பாடம்
Updated on
2 min read

ஹரியாணா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் பேரணியில் வெடித்த கலவரம் அதிர்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், ஹரியாணாவில் மதக் கலவரம் மூண்டிருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியில் இருப்பது பாஜக என்பது கவனிக்கத்தக்கது. ஹரியாணா கலவரத்தில் காவலர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் பலர் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜூலை 31 அன்று விஎச்பி அமைப்பின் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ பேரணி, கேட்லா மோட் என்ற பகுதியைக் கடந்தபோதுதான் இரண்டு தரப்பினருக்குஇடையிலான மோதலாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பேரணியின்போது எதிர்த்தரப்பினர் கல்வீச்சு நிகழ்த்தியதில் பேரணியில் பங்கேற்றவர்கள் ஒரு கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இந்தப் பேரணியில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பசு குண்டர் மோனு மானேசர் கலந்துகொண்டதுதான் இந்தப் பிரச்சினையின் முதன்மைக் காரணி எனச் சொல்லப்படுகிறது. ராஜஸ்தானில் பசுக்களைக் கடத்தியதாகக் கூறி ஜூனைத், நசீர் ஆகிய இருவரை மோனு எரித்துக் கொன்றதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

ஹரியாணா அரசு செயல்படுத்திய ‘பசு பாதுகாப்புச் செயல் குழு’வின் முன்னணி நபராக மோனு கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ‘மோனு மானேசரைக் கைதுசெய்க’ என்கிற வாசகம் சமூக ஊடகங்களில் கடந்த ஜூன் மாதம் டிரெண்டிங்கில் இருந்தது. இவரைக் கைதுசெய்ய ராஜஸ்தான் அரசு முயன்றுவருகிறது. தவிர, இந்தப் பேரணிக்கு முன்னதாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் காணொளிகள் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹரியாணா வன்முறை குறித்துப் பேசியிருக்கும் அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டர், ஐம்பது, அறுபதாயிரம் காவலர்களை வைத்துக்கொண்டு இரண்டே முக்கால் கோடி மக்கள்தொகையில் ஒவ்வொருவரையும் பாதுகாப்பது சாத்தியமல்ல என்கிறரீதியில் கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மதக் கலவரம் நடைபெறக்கூடும் என உத்தேசிக்கக்கூடிய இடங்களில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவான அமைப்பின் பேரணி நடத்தப்பட்டதும், அதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததும் மாநில அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது.

தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவியிருப்பதும், டெல்லியிலேயே பல இடங்களில் விஎச்பி அமைப்பினர், கலவரத்தைக் கண்டிப்பதாகச் சொல்லி ஆவேசமாகப் போராட்டம் நடத்தியிருப்பதும் கவலையை அதிகரித்திருக்கின்றன.

கலவரம் மூண்ட நூஹ் பகுதியில் கடந்த ஆண்டு பசு வதை செய்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஹரியாணா சட்டமன்ற உறுப்பினர் மம்மன் கான், பசு குண்டர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அம்மாநில முதல்வருக்கு அப்போது கடிதம் எழுதியிருந்தார். இப்போதும் இந்தக் கலவரத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

விலங்கு நலன் என்கிற பெயரில் அடிப்படைவாதத்தை ஒரு ஜனநாயக அரசு வளரவிடுவது இந்திய அரசமைப்புக்கே எதிரானது. மதச்சார்பற்ற நாட்டில் எல்லா நம்பிக்கைகளுக்கும் இடமும் மதிப்பும் உண்டு. இதை உணர்ந்து ஜனநாயக அரசு செயல்பட வேண்டும் என்பதை இந்தக் கலவரமும் உரத்துச் சொல்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in