

பிரதமர் மோடி 2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து நேற்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. நாட்டின் பொருளாதாரமும் மக்களும் இதனால் அடைந்துள்ள பாதிப்புகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
கள்ள நோட்டுகள், கறுப்புப் பணம், பயங்கரவாதிகளுக்கான செல்வ வழி எல்லாவற்றையும் ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று முதலில் சொன்னார் மோடி. ஆனால், இந்நடவடிக்கையின் நோக்கங்களை அரசு அவ்வப்போது மாற்றிக்கொண்டே சென்றது.
விதிமுறைகளும் பல முறை மாற்றப்பட்டன. கையில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், வங்கிக் கணக்கிலிருந்த பணத்தையும் மாதாந்திர ஊதியம், ஓய்வூதியங்களையும் எடுப்பதற்கும் வங்கிகளின் வாசலில் நாடு முழுவதும் மக்கள் கால் கடுக்க நின்றனர். பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் என்று மொத்தம் 104 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஏடிஎம்கள் முன் வதைபட்டனர் மக்கள். அரசாங் கம் மின்னணுப் பரிவர்த்தனைக்கு மக்களை மாறச் சொன்னது.
அதிலுள்ள சிரமங்களும், செலவும் மக்களின் தலையிலேயே விடிந்தன. “ரூ.1,000, ரூ.500 போன்ற உயர் மதிப்புள்ள நோட்டுகளை எளிதாகப் பதுக்கி கறுப்புப் பணமாக்கிவிட முடியும்” என்று சொன்ன அரசு, மாற்றாக ரூ.2,000 நோட்டுகளைக் கொண்டு வந்ததும், இப்போதுள்ள நோட்டுகளில் 50%-க்கும் மேல் ரூ.2,000 நோட்டுகள் என்பதும்தான் உச்ச முரண் நகை!
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட, ரொக்க மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் கோடி; அதில் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி மீண்டும் வங்கிக்குத் திரும்பி வராது, அந்தப் பணம் அரசுக்கு மறைமுக வருவாயாக மாறும்; வரிகளைக் குறைக்க முடியும் என்று கணக் கிடப்பட்டது. ஆனால் 99% ரொக்கம் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, இந்நடவடிக்கையின் தோல்வி பட்டவர்த் தனமானது. இந்நடவடிக்கையை எதிர்க் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சித்தபோது அதை மறுத்த ஆளுங்கட்சி யினர், ‘கறுப்புப் பண ஆதரவாளர்கள்’ என்றும் ‘தேச விரோதிகள்’ என்றும் விமர்சகர்களைச் சாடினர்.
முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங், மாநிலங்களவை யில் நிகழ்த்திய உரையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஜிடிபியில் சரிவு ஏற்படும் என்று எச்சரித்தது அப்படியே பலித்தது. அவரையும் சாடிய ஆளுங்கட்சியினர் வெளியிலிருந்து ஒலித்த எவர் குரலையும் இறுதிவரை பொருட்படுத்தவில்லை. ஜூலை 1 நள்ளிரவில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) அதிலுள்ள குளறுபடிகளால் வணிகச் சமூகத்திடம் பெரும் பாதிப்பை உருவாக்கிவருகிறது.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் எதேச்சதிகாரத்தின் வாயிலாக வெற்றி பெற முடியவே முடியாது. குறிப்பாக, ஆட்சியாளர்களிடம் சாகசவாதம் கூடாது. எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், தோல்வியிலிருந்து மீள முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆட்சியாளர் களுக்கு வேண்டும். மேலும் மேலும் தன்னுடைய செயல்பாட்டை நியாயப்படுத்துவதற்குப் பதிலாக, பொருளாதாரத்தை இன்றளவும் தொடரும் நெருக்கடிச் சூழலிலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகளில் மோடி அரசு இறங்க வேண்டும்!