

கா
ங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அக்கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்க இருப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. டிசம்பர் 16-ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ராகுல்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும் என்பது துரதிர்ஷ்டவசமானது. எனினும், பாஜகவுக்கு தேசிய அளவிலான மாற்றாக உருவெடுக்க காங்கிரஸ் போராடிவரும் நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.
2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ராகுலைக் கட்சித் தலைவர் ஆக்குவதற்குக் கட்சி மேலிடத்துக்கு விருப்பமில்லை. பலம் பொருந்திய நிலையில் பாஜக இருந்த சமயத்தில் ராகுலை முன்னிறுத்துவது, மோடியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்பது ஒரு காரணம். சோனியா காந்தியின் உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பேற்பதில் ராகுல் அத்தனை அவசரம் காட்டவில்லை.ஆனால், தற்போது மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தில் டிசம்பரில் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரத்தில் முன்பை விட தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ராகுல். 1985 சட்ட மன்றத் தேர்தலுக்குப் பிறகு, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாத நிலையில் ராகுலின் இந்த முனைப்பு, பெரும் சவால்களுக்கு அவர் தயாராக இருப்பதை உணர்த்துகிறது.
2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றபோது, மன்மோகன் சிங்கைப் பிரதமர் பதவி ஏற்க அழைத்தார் சோனியா. அப்போது, ராகுல் மிகவும் இளையவர் என்பதும் அனுபவம் இல்லாதவர் என்பதும் அவர் பிரதமர் பதவிக்குத் தேர்வுசெய்யப்படாததற்கான காரணங்கள் எனலாம். அதற்குப் பிறகும் ஆட்சியில் பங்கேற்பதில் அவர் விருப்பம் காட்டாமல்தான் இருந்தார். பல விஷயங்களில் தன் சொந்தக் கட்சியையே விமர்சித்தார். 2013-ல், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் காக்கும் வகையில் காங்கிரஸ் அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்தபோது, அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று பேசியது இன்றும் நினைவுகூரக்கூடியது. எனினும், தற்போது அவரிடம் அரசியல் முதிர்ச்சியைப் பார்க்க முடிகிறது. மோடி அரசின் தோல்விகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய கேலிகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.
வாரிசு அரசியல் மூலம் கட்சித் தலைமைப் பதவியைப் பெறுவது அவருக்கு எளிதான விஷயம்தான். ஆனால், இந்தியா போன்ற மிகப் பெரிய தேசத்துக்குத் தலைமையேற்பதற்கு, மக்கள் ஏற்கக்கூடிய ஒரு அரசியல் பார்வையை அவர் முன்வைக்க வேண்டும். மோடி தனது வீழ்ச்சியைத் தானே தேடிக்கொள்வார் என்று காத்திருப்பதில் பலனில்லை. மோடியின் செயல்பாடுகளையும் பாஜகவின் அரசியல் பாணியையும் விமர்சித்துக்கொண்டிருப்பவர் எனும் நிலையைத் தாண்டி, ஒரு தகுதிவாய்ந்த பிரதமர் வேட்பாளர் என்று ராகுல் தன்னை நிரூபிக்க வேண்டிய தருணம் இது!